Published : 08 Jul 2014 05:58 PM
Last Updated : 08 Jul 2014 05:58 PM

ரயில்வே பட்ஜெட்டில் ஆடம்பரத்துக்கு முக்கியத்துவம்: தமிழக காங்கிரஸ் கருத்து

முன்பதிவு செய்த பயணிகளின் பெயர்களை டிஜிட்டல் முறையில் வைப்பது உட்பட ரயில்வே பட்ஜெட்டில் ஆடம்பரமான அறிவிப்புகளே வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கருத்து தெரிவித்துள்ளார்.

ரயில்வே பட்ஜெட் குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக, தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் ஆக சதானந்த கவுடாவின் அறிவிப்புகள் இருக்கின்றன.

நிர்வாக ரீதியாக அறிவிக்க வேண்டிய அறிவிப்புகள், மிக ஆடம்பரமாக இந்த பட்ஜெட் உரையில் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக ரயில் பெட்டிகளை சுத்தமாக வைத்திருப்பது, ரயில் நிலையங்களின் தரத்தினை உயர்த்துவது, முன்பதிவு செய்த பயணிகளின் பெயர்களை டிஜிட்டல் முறையில் வைப்பது என்பதெல்லாம் இவைகளில் அடக்கம்.

ஏற்கனவே காங்கிரஸ் அரசு திட்டமிட்டு, செயல்படுத்திய பல திட்டங்கள், இன்று புதிய அறிவிப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 1 ரூபாய் வருமானத்தில் 93 பைசா செலவாகிறது என்று சொல்லியிருக்கிற சதானந்த கவுடா, வருமானத்தை உயர்த்துவதற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் என்ன நடவடிக்கை என்று சொல்லாமல், நேரடி அந்நிய முதலீட்டை கேட்போம் என்று அறிவிக்கிறார். ரயில்வே துறையை தனியார்மயமாக்குதலும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ரயில்வே துறையை திறந்து விடுவதற்கும் இன்றைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பல்கலைக் கழகம், வடகிழக்கு மாகாணங்களுக்கு அதிக நிதி இவையெல்லாம் வரவேற்கத்தக்க அம்சங்கள் என்றாலும், இந்தியாவின் ரயில்வே அமைச்சராக இல்லாமல், கர்நாடக மாநிலத்தின் ரயில்வே அமைச்சராக சதானந்த கவுடா இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநில தேர்தல் மனதில் வைத்தும், சில அறிவிப்புகள் மும்பையை மனதில் வைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில் கட்டண உயர்வு திரும்பப் பெறப்படவில்லை. மொத்தத்தில் தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தரும் ரயில் பட்ஜெட் ஆகும்" என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x