Published : 10 Sep 2017 11:59 AM
Last Updated : 10 Sep 2017 11:59 AM

சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நாடகம்: ‘தி இந்து - யாதும் தமிழே’ விழாவில் ‘ப்ரோ, கொஞ்சம் தமிழ்ல பேசுங்க’- அரங்கேற்றுகிறது ‘தியேட்டர்காரன்’ குழு

சென்னையின் வீதிகளில் இறங்கி வித்தியாசமான நாடகங்களை அரங்கேற்றும் ‘தியேட்டர்காரன்’ குழுவினரைப் பலரும் பார்த்திருப்பீர்கள். அவர்களது வீதி நாடகங்கள் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளன.

ஸ்ரீராம், ராகவ், சபரி ஆகிய 3 இளைஞர்களால் 2016-ல் தொடங்கப்பட்டது ‘தியேட்டர்காரன்’ நாடகக் குழு. வீதி நாடகங்கள் மட்டுமில்லாமல் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராணக் கதைகளுக்கு நவீன வடிவம் கொடுத்து, நிகழ்கால சமூகப் பிரச்சினைகளுடன் இணைத்து ரசிக்கும்படி கொடுக்கின்றனர். இவர்கள் சமீபத்தில் வெளியிட்ட ‘மாறா’ நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் இணை தயாரிப்பில் வெளியான அந்த நாடகத்தில், நிகழ்கால திருடன் ஒருவனுக்கு ராவணனின் கதையைச் சொல்கிறார் அனுமன். அதில் ராவணனின் நற்பண்புகள், மண்டோதரியுடன் அவனுக்கு இருந்த ஆத்மார்த்தமான அன்பு ஆகியவற்றையும் அனுமன் வெளிப்படுத்துவது நாடகத்தின் சிறப்பு.

‘தியேட்டர்காரன்’ குழுவினரின் கதை - எழுத்தாளரும், இயக்குநருமான ஸ்ரீராமிடம் பேசினோம். ‘‘நாங்கள் மூவரும் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்தாலும் நாடகத்தின் மீது கொண்ட காதல் காரணமாக ஒன்றாக இணைந்துள்ளோம். இத்தனைக் கும் எங்களில் பலருக்கு மேடை நாடகங்களில் முன்அனுபவம்கூட கிடையாது. தெரியாத விஷயங்களைக் கற்றுக்கொண்டு அதில் வெற்றி பெறுவதையே சவாலாகக் கருதுகிறோம். எங்கள் வெற்றிக்கு உதாரணம் ‘மாறா’ நாடகம். இயக்குநர் கவுதம் மேனன் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டினார்.

உலக பட்டினி ஒழிப்பு தினம், உலக பெண்கள் தினம் உள்ளிட்ட நாட்களில் அந்த தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை யின் வீதிகளில் நாடகங்கள் நடத்துகிறோம்” என்றார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் 5-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை சேத்துபட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர்.முத்தா கான்செர்ட் ஹாலில் வரும் 16-ம் தேதி நடக்கவுள்ளது. அதில், ‘ப்ரோ, கொஞ்சம் தமிழ்ல பேசுங்க’ என்ற நாடகத்தை ‘தியேட்டர்காரன்’ குழுவினர் அரங்கேற்ற உள்ளனர். இன்றைய தலைமுறையினர் தமிழை எப்படிப் பேசுகின்றனர் என்பதை நகைச்சுவையாகச் சொல்லும் நாடகம் இது. வாருங்கள், நிறைய சிரிப்பதுடன் சிந்திக்கவும் செய்யலாம்!

விவரங்களுக்கு: www.yaadhumthamizhe.com

பதிவுக்கு: SMS,THYTYour Name

Your AgeEmail id to 80828 07690.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x