

விருதுநகர்: திருச்சியில் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறும் மாநாடு, இளைஞர்களை அடுத்த கட்ட போராட்டத்துக்கு ஆயத்தப்படுத்தும் மாநாடு என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
அகில இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், ‘எங்கே எனது வேலை’ என்ற தலைப்பில் விருதுநகரில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, விருதுநகர் எம்ஜிஆர் சிலையில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பேரணியாக பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர்.
அப்போது, முத்தரசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், கடந்த 23-ம் தேதி கன்னியாகுமரி, வேதாரண்யம், ஓசூர், சென்னையில் இருந்து பரப்புரை இயக்கம் புறப்பட்டு, மக்களை சந்தித்து வருகிறது.
ஏப்ரல் 2-ம் தேதி திருச்சியில் எழுச்சி மாநாடாக நடைபெறுகிறது. இந்த பரப்புரை பயணம், பிரதமர் மோடிக்கு மிகக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தலாம். இதில் பங்கேற்பவர்கள் ஓரிரு நாட்களில் கைது கூட செய்யப்படலாம். ஏனெனில் நாட்டில் உண்மையை சொன்னால் கைது செய்யப்படுகிறார்கள்.
இன்று இளைஞர்களின் வேலை பறிக்கப்படுகிறது. பிரதமர் மோடி 33 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டார். அதானிக்கு கிடைத்த ரூ.20 ஆயிரம் கோடி குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இதனால் கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கியுள்ளனர். ஒற்றை நபரை காக்க நாடே பழிவாங்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசு துறைகளில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும். திருச்சியில் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறும் மாநாடு பரப்புரையோடு நிற்காமல்,அடுத்த கட்ட போராட்டத்துக்கு இளைஞர்களை ஆயத்தப்படுத்துவதாக இருக்கும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு குறைபாடுகளை சரி செய்ய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. விருதுநகரை மிளகாய் மண்டலமாக அறிவித்ததற்கும், விருதுநகரில் ஜவுளி பூங்கா கொண்டு வந்ததையும் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.