Published : 28 Mar 2023 06:18 AM
Last Updated : 28 Mar 2023 06:18 AM
கோவில்பட்டி: மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என, திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு, குடும்ப அட்டைகளில் பெண்களின் படம் தான் இருக்க வேண்டும் என வதந்தி பரவியது.
இதனால், ஏராளமானோர் குடும்ப அட்டையில் குடும்ப தலைவரின் பெயரை மாற்றுவதற்காக வட்டாட்சியர் அலுவலகங்களில் குவிந்தனர். இந்நிலையில், தகுதியுள்ளவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகள், நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், அதிகாலையில் கடற்கரைநோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழில் புரியும்மகளிர், சிறிய கடைகள், வணிகம்மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என, பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம் புதூர் பகுதியில் மகளிர் உரிமைத்தொகையானது மாதந்தோறும் அஞ்சலக கணக்கில் வரவு வைக்கப்படும் என வதந்தி பரவியுள்ளது. இதனால், பெண்கள்தங்களது ஆதார், பான் அட்டைகளுடன் அஞ்சலகங்களில் குவிந்துவருகின்றனர்.
இதையடுத்து புதூர்வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் அஞ்சலக அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நேற்று நடத்தப்பட்டது. இதனை அறிந்த பெண்கள் அங்கும் குவிந்தனர்.
இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “அஞ்சலக கணக்கு தொடங்கினால் தான் மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா என்பதை தமிழ்நாடு அரசும், அதிகாரிகளும் தெளிவுபடுத்த வேண்டும். மக்களை குழப்பும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT