Published : 28 Mar 2023 06:00 AM
Last Updated : 28 Mar 2023 06:00 AM
திருப்பத்தூர்: மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு காலதாமதமாக வந்த அரசு அதிகாரிகளை வெளியே நிறுத்தி மாவட்ட ஆட்சியர் தண்டனை வழங்கிய சம்பவம் திருப்பத்தூரில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் 3-வது ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் சமீபத்தில் பொறுப் பேற்றார். இதைத்தொடர்ந்து, அரசு விழாக்கள், சிறப்பு கூட்டங் கள், ஆய்வு கூட்டங்கள், மக்கள் குறைதீர்வு கூட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் என பல்வேறு நிகழ்வுகளில் பல அதிரடி மாற்றங்களை அவர் கொண்டு வந்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கு, பொதுமக்கள் தரப்பில் பெரும் வரவேற்பும் இருந்தது. அதேபோல, கூட்டத்துக்கு தாமத மாக வரும் அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்ட அரங்குக்கு ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வந்தபோது, கூட்டரங் கில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே அரசு அலுவலர்கள் அமர்ந் திருந்தனர். பெரும்பாலான நாற் காலிகள் காலியாகவே இருந்தன.
இதைப்பார்த்ததும் அதிர்ச்சி யடைந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மக்கள் குறைதீர்வு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே அரசு அலுவலர்கள் இருக்கையில் இருக்க வேண்டும். ஆனால், இங்கு கூட்டம் தொடங்கி இவ்வளவு நேரம் கழித்தும் முக்கிய பொறுப்பில் உள்ள அரசு அலுவலர்கள் வரவில்லையே என ஆதங்கப்பட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பாதுகாவலர்கள் மூலம் கூட்டரங்கின் வாயில் கதவுகளை மூடச்சொன்னார்.
மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயகுமாரி, கலால் உதவி ஆணையர் பானு உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகளை கொண்டு மக்கள் குறைதீர்வு கூட்டத்தை நடத்த தொடங்கினார். காலதாமதமாக வந்த அரசு அலுவலர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என பாதுகாவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவராக வந்த அரசு உயர் அதிகாரிகள் வாயில் கதவு மூடப்பட்டிருப்பதும், நேரத்துக்கு வராததால் அரசு அதிகாரிகளை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை கேட்டறிந்து திடுக்கிட்டு நுழைவு வாயில் அருகே பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்தனர்.
பின்னர், அடுத்த சில மணி நேரம் கழித்து காலதாமதமாக வந்த அரசு அலுவலர்களை அழைத்து, இனி யாரும் காலதாமதமாக கூட்டத்துக்கு வரக்கூடாது. பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பொதுமக்கள் நமக்கு முன்பாகவே இங்கு வந்து மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர். அவர்களது உணர்வுக்கும், எதிர்பார்ப்புக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.
நாம் தான் அவர்களுக்காக காத்திருக்க வேண்டுமே தவிர நமக்காக அவர்கள் காத்திருப்பது நியாய மில்லை. இனி ஒருபோதும் இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. இது இறுதி எச்சரிக்கை எனக்கூறிய ஆட்சியர் அவர்களை கூட்ட அரங்குக்குள் அனுமதித்தார். அதன் பிறகே கூட்டம் பரபரப்புடன் தொடங்கியது. கூட்டத்துக்கு காலதாமதமாக வந்த அரசு அலுவலர்களை வெளியே நிறுத்தி தண்டனை வழங்கிய மாவட்ட ஆட்சியரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT