

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 160 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், பூங்கா, தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர் போன்ற சில இடங்களில் மட்டும் கழிப்பறை வசதிகள் உள்ளன.
பெரும்பாலான ரயில் நிலையங்களில் கழிப்பறைகள் செயல்படாமல் உள்ளன. இதனால், நீரிழிவு நோயாளிகள், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிப்பறை வசதி இருந்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், ரயில் நிலையங்களில் தனியார் வாயிலாக போதிய அளவில் கட்டண கழிப்பறையை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னைரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் நிலையங்களில் மூடியிருந்த கழிப்பறைகள் தற்போது திறக்கப்பட்டு, படிப்படியாக கட்டண கழிப்பறையாக மாற்றப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், அம்பத்தூர், புத்தூர், காட்பாடி, ஆவடி, மாம்பலம், திருவள்ளூர் உள்ளிட்ட 9ரயில் நிலையங்களில் கழிப்பறைவசதி செயல்படுத்த ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.