Published : 27 Mar 2023 06:55 AM
Last Updated : 27 Mar 2023 06:55 AM

சென்னையில் ஆவின் நிறுவனம் விநியோகித்த 60 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனது: பால் முகவர்கள் நலச் சங்கத்தினர் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் ஆவின் நிறுவனம் விநியோகித்த 60 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனதாக பால் முகவர்கள் நலச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் பால் நிறுத்தப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால், ஆவின் நிறுவனத்துக்கு பால்வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் ஆவின் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.

பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், பொதுமக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடின்றி தொடர்ந்து விநியோகம் செய்வதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசிடமும், முதல்வரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக, ஆவின் நிர்வாகம் குறுக்கு வழிகளில் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பால் பவுடர் மற்றும் வெண்ணெய் கொள்முதல் செய்து, அவற்றைக் கரைத்து, சமன்படுத்தி, பால் உற்பத்தி செய்து, அதை மக்களிடம் விநியோகம் செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்த நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதாகவும், கோவை ஒன்றியத்தில் சில தினங்களுக்கு முன் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் சுமார் 35 ஆயிரம் லிட்டர்பால் கெட்டுப்போனதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில், நிலைப்படுத்தப்பட்ட பால் உற்பத்தியின்போது, பால் பவுடர் மற்றும் வெண்ணெய் சரியாக சமன்படுத்தப்படாததால், சனிக்கிழமை மாலை உற்பத்தி செய்து, குளிரூட்டும் அறையில் வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (நேற்று) அதிகாலையில் விநியோகத்துக்கு அனுப்பப்பட்ட சுமார் 60 ஆயிரம் லிட்டர் ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் கெட்டுப்போனதாக பால் முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பால் முகவர்களிடமிருந்து பச்சை நிற பால் பாக்கெட்டுகளை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள், அது கெட்டுப்போனதாக கூறி, வேறு பால் பாக்கெட்டுகளைக் கொடுக்குமாறு தகராறு செய்துள்ளனர்.

இதனால், அம்பத்தூர், ஆவடி,பட்டாபிராம், முகப்பேர், பாடி,அண்ணா நகர், நெற்குன்றம், மதுரவாயல், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பால் முகவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஏறத்தாழ 60 ஆயிரம் லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போய், சுமார் ரூ.26 லட்சம் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, மகாராஷ்டிரா பால் பவுடர் மற்றும் வெண்ணெய் கலந்துபால் தயாரிக்கப்பட்டபோது, கவனக்குறைவாக இருந்து ஆவினுக்கு கடும் நிதியிழப்பை ஏற்படுத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால் முகவர்கள் நலச் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x