Published : 27 Mar 2023 07:50 AM
Last Updated : 27 Mar 2023 07:50 AM

கரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள்: அப்போலோ மருத்துவர்கள் தகவல்

சென்னை: கரோனா தொற்று பாதிப்புக்கு பிறகுசர்க்கரை நோய், ஞாபக மறதி,சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுவாச மண்டலம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் சார்பில் நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு-2023 சென்னையில் நேற்று நடைபெற்றது.

மருத்துவமனையின் மூத்த சுவாச மண்டலநிபுணர் ஆர்.நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் நெஞ்சக சிகிச்சைத்துறை மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு கரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், வயது வந்தோருக்கான தடுப்பூசி, ஆஸ்துமா, இன்ப்ளூயன்சா பாதிப்பு, சுவாச நோய்கள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினர்.

குறிப்பாக கரோனா தொற்று பாதிப்புக்கு பிந்தைய நிலையில் பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் தொற்று அதிகரித்து உள்ளதாகவும், தற்போது பரவும் இன்ப்ளுயன்சா ஏ மற்றும் பி வகைகளின் காரணமாக தொற்று பாதிப்பு எளிதில் ஏற்படுவதாகவும் கூறி விவாதித்தனர். இதனால் சிகிச்சை அளிப்பதற்கு சவாலாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

நிகழ்வை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேசுகையில், “கரோனாவின் தாக்கம் நமக்கு பலவற்றை கற்றுகொடுத்திருக்கிறது. எதிர்காலத்தில் மருத்துவத் துறையின் பயன்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய மருத்துவத் துறையில்சமீப காலமாக அதிகரித்துவரும் முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை” என்றார்.

தொடர்ந்து சுவாச மண்டல நிபுணர் ஆர்.நரசிம்மன், தொற்றுநோய் பிரிவு மருத்துவர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: பிசிஜி தடுப்பூசியானது பிறந்தகுழந்தைகளுக்கு மட்டுமே போடப்படுகிறது. காசநோய் (டிபி) தடுப்புக்காக போடப்படும் இத்தடுப்பூசியானது குழந்தைகளுக்கு 5 வயது முதல் 10 வயது வரை டிபியின் தாக்கம் அதிக அளவு வராமல் இருக்கவும், மூளைக்காய்ச்சல் ஏற்படாமலும் இருக்கவும் உதவுகிறது. கரோனா காலத்தில் பிசிஜியை ஒரு கரோனா தடுப்பூசி பூஸ்டராக பயன்படுத்த முடியுமா என சோதித்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.

கரோனா தொற்று பாதிப்புக்குபிறகு சிலருக்கு உடல் சோர்வு,ஞாபக மறதி, சுறுசுறுப்பு இல்லாமை, நுரையீரல் கோளாறு போன்ற பல்வேறுபிரச்சினைகள் சீராக ஏற்படுவதை காணமுடிகிறது. சர்க்கரை நோய்பிரச்சினையும் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது. இன்ப்ளூயன்சாவுக்கு பிறகு மாரடைப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் கரோனாவால் பாதிக்கப்படும்போது உடலின் மற்ற உறுப்புகளும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இம்மாநாட்டில் அப்போலோ மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவ ஆலோசகர் சத்யபாமா, மூத்த சுவாச மருத்துவ ஆலோசகர் காயத்ரி, தொற்றுநோய் பிரிவு மருத்துவர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x