

விமர்சனங்களுக்கு ஜனநாயக ரீதியில் பதில் அளிக்காமல் நடிகர் கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசி வருவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கமல்ஹாசன், ‘‘கைது செய்தால் சட்டம் என்னை பாதுகாக்கும்’’ என்றார். ‘‘தமிழகத்தில் அனைத்து மட்டங்களிலும் ஊழல் மலிந்துவிட்டது’’ என்றும் குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, கமல்ஹாசனுக்கு பதில் தரும் வகையில் அமைச்சர்கள் பேசிவருகின்றனர். கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசுவதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஜனநாயக நாட்டில் கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஜனநாயகரீதியாக நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துகளுக்கு, பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் உரிய பதில் அளிக்க வேண்டுமே தவிர, மிரட்டும் வகையில் பேசக் கூடாது.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: அதிமுக அரசை விமர்சனம் செய்ததற்காக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு தொடருவோம் என சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருப்பது ஜனநாயக விரோதச் செயல். இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது, கடும் கண்டனத்துக்குரியது. ஜனநாயகத்தில் ஓர் அரசை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்த உரிமை கமல்ஹாசனுக்கு மட்டும் இல்லையா என்பதை அமைச்சர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: ஜனநாயக நாட் டில் கருத்து சொல்லவும், அரசை விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில் கமல்ஹாசன் அதிமுக அரசை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இயல்பாக, துணிவுடன் கருத்து சொல்பவர் என்று கூறப்படும் கமல், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை மவுனமாக இருந்தது ஏன்? அப்போதெல்லாம் அதிமுக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளே இல்லையா? 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுக சிக்கியபோது கமல் கருத்து கூறாதது ஏன்? சூழ்நிலையைப் பயன்படுத்தி விமர்சனம் செய்தால் அதற்கு பதில் விமர்சனமும் வந்தே தீரும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: விமர்சனம் செய்வது அனைத்து குடிமக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள சட்ட உரிமை. அந்த உரிமையைப் பயன்படுத்தியதற்காக கமல்ஹாசனை தமிழகத்தின் மூத்த அமைச்சர்கள் சிலர் தரம் தாழ்ந்து விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. உண்மைகளும், விவரங்களும் அவரது விமர்சனத்துக்கு மாறாக இருந்தால், அதன் அடிப்படையில் அதை மறுப்பதற்கான உரிமை ஆளும்கட்சிக்கும், அமைச்சர்களுக்கும் உண்டு. அதேநேரம், இந்த விமர்சனத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், ‘கடந்த காலத்தில் அவர் முறையாக வரி கட்டி இருக்கிறாரா என்பதை விசாரிப்போம்’ என்று மூத்த அமைச்சர்கள் பேசுவதும் மிரட்டலாகும். சரியான ஒரு கருத்துக்காக மிரட்டப்படும் கமல்ஹாசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது ஆதரவை தெரிவித்துக் கொள் கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பதை, கூவத்தூர், குட்கா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என அனைத்து சம்பவங்களும் அம்பலப்படுத்தின. இந்த நிலையில், கமல்ஹாசனின் கருத்துக்கு, மிரட்டுகிற முறையில் எதிர்மறை கருத்துகள் கூறுவது கண்டனத்துக்குரியது. கமல்ஹாசனை குறிவைத்து, மிரட்டும் வகையில் அரசியலுக்கு அப்பாற்பட்ட கருத்துகளை, சொல்லாடல்களை அமைச்சர்கள் வெளிப்படுத்துவது ஏற்புடையது அல்ல. ஆட்சியாளர்கள் எத்தகைய உயரத்தில் இருந்தாலும் கருத்து கூற, குடிமக்களுக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துரிமைக்கு இந்திய கம்யூனிஸ்ட் எப்போதும் துணை நிற்கும்.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி (அதிமுக புரட்சித்தலைவி அம்மா): ஆட்சியை விமர்சனம் செய்ய அனைவருக்கும் முழு உரிமை உண்டு. அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் இந்த ஆட்சியை விமர்சனம் செய்திருக்கிறார். அவரது விமர்சனத்தை ஆட்சியாளர்கள் கேட்டறிந்து, அதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும். ஆட்சியாளர்கள் கோபப்படுவது அரசியல் தர்மத்துக்கு மாறான செயல். விமர்சனம் என்பது ஆரோக்கியமான நடைமுறை. விமர்சனத்துக்கு பதில் சொல்ல வேண்டியது ஆட்சியாளர்கள் மற்றும் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் கடமை. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.