முன்னேற விழையும் மாவட்டங்கள் தர வரிசையில் விருதுநகருக்கு 3-வது இடம்
விருதுநகர்: நாட்டில் உள்ள 112 முன்னேற விழையும் மாவட்டங்களில், 14-வது இடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம் தற்போது 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் நாட்டில் 112 பின்தங்கிய பகுதிகள் கொண்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 2018 ஜனவரியில் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்திலிருந்து விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னேற விழையும் மாவட்டங் களில் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 49 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தக் காரணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்கள், ஒவ்வொரு மாதமும் ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்’ என்ற ‘டாஸ்போர்டில்’ பதிவேற்றம் செய்து அதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மாதத்தின் இறுதியில் தரவரிசை வெளியிடுகிறது.
இத்தரவரிசைப்படி, குறிப்பிடப் பட்ட 14 காரணிகளில், விருதுநகர் அனைத்துப் பிரிவிலும் சிறப்பாகச் செயல்பட்டு நிதி ஆயோக்கினால் 2021-ல் ரூ.1 கோடி, 2021-ல் ரூ.4 கோடி, 2022-ல் ரூ.4 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உட்கட்டமைப்பிலும், சுகாதாரம்-ஊட்டச்சத்து பிரிவிலும் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக 2019, 2020-ம் ஆண்டுகளில் தலா ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு செய்த ரூ.15 கோடி நிதியைப் பயன்படுத்தி மத்திய அரசு ஒப்புதல் அளித்த பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, இத்திட்டத் தின் தொடக்கத்தில் 112 முன்னேற விழையும் மாவட்டங்களில் 14-வது இடத்தில் இருந்த விருதுநகர் 2023 ஜனவரியில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதேபோல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துப் பிரிவில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால், சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருதுகள் 2022-ல் வழங்கப்பட்டன. இதில் முன்னேற விழையும் மாவட்டப் பிரிவில், விருதுநகர் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.
