

கோவில்பட்டி: கீழவைப்பார் ஊராட்சியில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த நாய், நேற்று காலையில் தெருவில் விளையாடிய குழந்தைகள், நடந்து சென்ற பெண்கள், முதியவர்கள் என, சுமார் 20 பேரை கடித்தது.
இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கிராம இளைஞர்கள் ஒன்று திரண்டு, அந்த வெறிநாயை விரட்டியடித்தனர்.
அது காட்டுப்பகுதிக்குள் சென்று பதுங்கிவிட்டது. ஊராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, பொதுமக்களை கடித்த நாயை பிடிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கீழவைப்பார் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறும்போது, “ நாய் கடித்தது குறித்து ஊராட்சி மன்றத்துக்கும், அரசு துறைக்கும் தகவல் அளித்துவிட்டோம். ஆனால், இதுவரை யாரும் வந்து கிராமத்தை பார்க்கவில்லை. எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை” என்றனர்.