Published : 21 Sep 2017 07:51 AM
Last Updated : 21 Sep 2017 07:51 AM

காப்பீட்டு பிரீமியம், சேவைக் கட்டணங்கள் மீதான ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: எல்ஐசி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

அகில இந்திய காப்பீட்டு ஊழியர்கள் சங்கம் சென்னை மண்டலம் 1-ன் பொதுச் செயலாளர் எஸ். ரமேஷ் குமார் கூறியதாவது:

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) கடந்த ஜூலை 1-ம் தேதி அமல் படுத்தியது. இப்புதிய வரி சாதாரண, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், சமூகப் பாதுகாப்பு அளித்து வரும் காப்பீட்டுத் துறையும் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆயுள் காப்பீட்டு மீதான சேவை வரிகள் கடந்த 3 ஆண்டுகளில் 12.36 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. இச்சேவை வரியை ரத்து செய்ய வேண்டுமென்று ஏற்கெனவே கோரிக்கை விடுத்து வந்தோம். இந்நிலையில், காப்பீட்டு பிரீமியத்துக்கு ஜிஎஸ்டி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தனிநபருக்கான ஆயுள் காப்பீடுகள், மருத்துவக் காப்பீடுகள், தனிநபர்களுக்கு காப்பீடு வழங்கக்கூடிய குழுத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்பு காப்பீட்டு பிரீமியம் மீதான தாமதக் கட்டணம் மீது சேவை வரி கிடையாது. தற்போது அதன் மீதும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, காப்பீட்டுத் தொகைக்கான வாரிசு நியமனம், காப்பீட்டு நகல் ஆவணம் வழங்குதல் ஆகிய சேவைக் கட்டணங்கள் மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடுகளிலும் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் சாதாரண மக்களுக்கு காப்பீடு பரவலாக்குதல் என்ற இலக்குக்கு எதிராக அமைந்துள்ளது. சமூகப் பாதுகாப்பை அளிப்பது என்ற பொறுப்பில் இருந்து அரசு நழுவுவது போல் இச்செயல் அமைந்துள்ளது. மேலும், இதை எதிர்த்து நாங்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி அதை மத்திய நிதி அமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x