Published : 26 Mar 2023 07:20 AM
Last Updated : 26 Mar 2023 07:20 AM

இன்ஃபுளூயன்சா காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை - மாநில சுகாதாரத் துறை செயலர்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்

சென்னை: கரோனா தொற்று மற்றும் இன்ஃபுளூயன்சா காய்ச்சலைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை செயலர்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த பிப்.3-வது வாரம் முதல்நாடு முழுவதும் கரோனா பாதிப்புபடிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் கரோனா தாக்கம் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட சிலமாநிலங்களில் அதிகளவு காணப்படுகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டதன் காரணமாக, நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்து கரோனா உயிரிழப்புகளும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் பெருமளவு குறைந்துள்ளது.

இருப்பினும், தற்போது கரோனாவின் தாக்கம் மீண்டும் எழுச்சி பெறுவதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி யது அவசியமாகிறது.

நாடு முழுவதும் இன்ஃபுளூயன்ஸா உள்ளிட்ட புதிய காய்ச்சல்கள் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அந்த காய்ச்சல்களுக்கான காரணங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். பொதுவாகவே இந்தியாவில் ஜனவரி முதல் மார்ச் வரையிலும் அதன்பிறகு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலும் இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பாதிப்பு இருக்கும். தற்போது நாடு முழுவதும் இன்புளூயன்சா ஏ-வகை காய்ச்சல் அதிகளவு பரவி வருகிறது.

அடிப்படையில் கரோனாவுக்கும், இன்ஃபுளூயன்சா காய்ச்சலுக்கும் பலவற்றில் ஒற்றுமைகள் உண்டு. நோய் பரவுவதிலும், நோய்அறிகுறிகளிலும் கிட்டத்தட்ட ஒன்றுபோல்தான் இருக்கும். இதனால் எந்த வகைக் காய்ச்சல் என்பதைக் கண்டறிவதில் மருத்துவர்களுக்குக் கூட குழப்பம் வரலாம்.

கூட்டம் கூடுவது மற்றும் காற்றோட்டம் இல்லாத சூழலைத் தவிர்ப்பது, இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டையால் வாயைமறைத்துகொள்வது, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்வது, பொது இடங்களில் துப்புவதை தவிர்ப்பது என எளிமையான பொதுசுகாதார நடவடிக்கைகளை பின்பற்றினாலே கரோனா மற்றும் இன்ஃபுளூயன்சா பாதிப்பு வராமல் தவிர்க்க முடியும்.

இதுபோன்ற தொற்று நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்வது தொடர்பாக பின்பற்ற வேண்டிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகள், முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு மறுபயிற்சி அளிக்க பெரி தும் உதவும்.

மருத்துவமனைகளில் மருந்துகள், தேவையான படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைவசதிகள், மருத்துவ சாதனங்கள், மருத்துவ ஆக்சிஜன் போன்றவற்றை தயார்நிலையில் வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும்.

இவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் ஏப்.10 மற்றும் 11-ம்தேதி தேசிய அளவில் மருத்துவஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பங்கேற்கும். இந்த மருத்துவ ஒத்திகை தொடர்பான விவரங்கள் மார்ச் 27-ம்தேதி (நாளை) நடைபெற உள்ளஇணையவழி ஆலோசனை கூட்டத்தின்போது தெரிவிக்கப்படும்.

சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டையால் வாயை மறைத்துகொள்வது, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்வதன் மூலம் காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x