Published : 26 Mar 2023 07:43 AM
Last Updated : 26 Mar 2023 07:43 AM
மதுரை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என மதுரையில் நடந்த கூடுதல் நீதிமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று ரூ.166 கோடியில் கூடுதல் நீதிமன்றக் கட்டிடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இவ்விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வரவேற்றார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
பின்னர் மயிலாடுதுறையிலுள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலினும், மயிலாடுதுறை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் காணொலி மூலம் திறந்து வைத்தனர்.
இவ்விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நீதித்துறை உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதில், திமுக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டு பொறுப்பேற்று இன்று வரை புதிய நீதிமன்றங்கள் அமைக்க நீதிபதிகள் நியமனம், அலுவலக கட்டமைப்புக்காக ரூ.106 கோடியே 77 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், சேலத்தில் பட்டிலியனத்தவர்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும். சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்ச நீதிமன்றக் கிளையை நிறுவ வேண்டும் என 3 கோரிக்கைகளை முன்வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை நீதிபதி பாராட்டு: நீதித் துறைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழக முதல்வர் 3 கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். உச்ச நீதிமன்றம் டெல்லிக்கு மட்டுமானது அல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமானது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேரில் அல்லது காணொலி வாயிலாக ஆஜராக முடியும். தமிழை வழக்காடு மொழியாக்க அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவைப்படலாம். நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியத்தில் 6 பேர் உள்ளோம். நீதிபதிகள் நியமனம் குறித்து விவாதித்து வருகிறோம்.
தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையே ஊதியம் வழங்கப்படுகிறது. இது போதுமானது அல்ல. இதனால் இளம் வழக்கறிஞர்கள் வேறு துறைகளில் பணிபுரியும் நிலை உள்ளது. இவ்வாறு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசினார்.
மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் நீதித்துறை கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழில் வழக்குகள் நடக்கின்றன. தொழில்நுட்ப வசதி, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட காரணங்களால், எதிர்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் கூட தமிழில் வாதாடுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். கரோனா காலத்தில் தமிழக நீதிமன்றங்கள் சிறப்பாகச் செயல்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம். சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதி டி. ராஜா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT