Published : 26 Mar 2023 04:03 AM
Last Updated : 26 Mar 2023 04:03 AM
கிருஷ்ணகிரி / ஓசூர் / தருமபுரி / அரூர்: கிருஷ்ணகிரி , தருமபுரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அரூர் அருகே இடி, மின்னலுக்கு கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு பண்ணையில் இருந்த 5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பகலில் வெயில் அதிகரித்த நிலையில், இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கிருஷ்ணகிரி, பாரூர், சூளகிரி, ஊத்தங்கரை, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: பெனுகொண்டாபுரம் 46.4, கிருஷ்ணகிரி அணை 37, பாம்பாறு அணை 36, ஊத்தங்கரை 33.6, கிருஷ்ணகிரி 23, சூளகிரி 15, நெடுங்கல் 9, பாரூர் 8.8, போச்சம்பள்ளி 6.1 மிமீ பதிவானது. இதனிடையே, நேற்று காலை வழக்கம்போல, வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது.
ஓசூரில் மழை: ஓசூரில் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று விநாடிக்கு 340 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து ஆற்றில் விநாடிக்கு 240 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 41.66 அடியாக உள்ளது.
கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 400 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 442 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து பாசனக் கால்வாய்கள் மற்றும் ஆற்றில் விநாடிக்கு 328 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 48.60 அடியாக உள்ளது.
தருமபுரியில் 12 மி.மீ. மழை: தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை வானில் மேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறிகள் தென் பட்டன. பின்னர் பலத்த காற்று வீசத் தொடங்கியது. காற்றைத் தொடர்ந்து சில பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி இரவு வரை பெய்தது. பலத்த காற்றால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக தருமபுரி பகுதியில் 12 மி.மீட்டர் மழை பதிவானது. பாலக்கோடு பகுதியில் 8.4 மி.மீ, அரூர் பகுதியில் 3 மி.மீ மழை பதிவானது. இதர சில பகுதிகளில் மிதமான தூறலுடன் கூடிய மழை மட்டுமே பெய்தது. மழை பெய்துள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து கோடை உழவுக்கு தயாராகி வருகின்றனர்.
5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன: அரூர் அருகே சிட்லிங் பகுதியில் மின்னல் தாக்குதலில் கோழிப்பண்ணையில் ஏற் பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன. அரூர் அருகே சிட்லிங் அடுத்த மலை தாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை சிட்லிங் பகுதியில் மழை பெய்தது. மழையின்போது மின்னல் மற்றும் இடியின் தாக்கமும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், இடி, மின்னல் தாக்கியதில் திருப்பதியின் கோழிப்பண்ணையில் தீப்பற்றி எரிந்தது. தீ விபத்தில் பண்ணையில் இருந்த சுமார் 5,000 கோழிகள் உயிரிழந்தன.
பண்ணையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 250 தீவன மூட்டைகளும் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT