Published : 02 Sep 2017 05:08 AM
Last Updated : 02 Sep 2017 05:08 AM

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்க காரணம் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்க வலுவான காரணம் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஐஎன்எக்ஸ் மீடியா’ நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக மொரீஷியஸில் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

2 முறை சம்மன்

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவரை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸை மத்திய அரசு அனுப்பி வைத்தது.

இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 23, 28-ம் தேதிகளில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான ஆவணங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து சிபிஐ தாக்கல் செய்தது.

சாதாரண வழக்கு அல்ல...

வழக்கு விசாரணையின்போது சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, “கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்க வலுவான காரணம் உள்ளது.

இந்த வழக்கை சாதாரணமாக கருத இயலாது. இது ஏதோ ஒரு நிறுவனம் சார்ந்த விவகாரம் அல்ல. வெளிநாட்டில் உள்ள கணக்குகள் மற்றும் சொத்துகள் தொடர்புடைய மோசடியாகும்” என்று வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், “சிபிஐ விசாரணையானது கார்த்தி சிதம்பரத்தை மையப்படுத்தி இல்லாமல், கடந்த 2007-ம் ஆண்டு ஒரு நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (எஃப்ஐபிபி) அனுமதி அளித்த அவரது தந்தையும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் குறித்து இருந்துள்ளது.

மேலும், அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்களாக இருந்த 6 அதிகாரிகளில் ஒருவரிடம்கூட விசாரணை நடத்தப்படவில்லை” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x