Published : 25 Mar 2023 04:15 AM
Last Updated : 25 Mar 2023 04:15 AM

நிகழ்ச்சிகளுக்காக லண்டன் சென்ற இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி

பாம்பே ஜெயஸ்ரீ

சென்னை: லண்டனில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற கர்னாடக, திரையிசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீக்கு உடல்நலக் குறைவுஏற்பட்டதால், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கர்னாடக, திரைப்படப் பின்னணிக் கலைஞரான பாம்பே ஜெயஸ்ரீ, இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றார். அங்கு லிவர்பூல் நகரில் உள்ளஒரு ஹோட்டலில் தங்கினார்.

இந்நிலையில், நேற்று அவர் அறையை விட்டு வெளியே வராததால், உடன் சென்றவர்கள் சந்தேகமடைந்து, அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது, பாம்பே ஜெயஸ்ரீ மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்குமூளையில் ரத்தக் கசிவு இருந்ததால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவரது உறவினர்கள் கூறும்போது, “பாம்பே ஜெயஸ்ரீ நல்ல நிலையில் உள்ளார். அவர் இரண்டு நாட்கள் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில், ஓய்வில் இருப்பார். சமூக வலைதளங்களில் பரவும்தவறான செய்திகளை புறக்கணிக்க வேண்டும்” என்றனர்.

லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் யோகோ ஓனோ லெனான் மையத்தில் உள்ள டங் ஆடிட்டோரியத்தில் நேற்று பாம்பே ஜெயஸ்ரீ நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்நிலையில், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அவர் பாடல்களைப் பாடியுள்ளார். மின்னலே படத்தில் இடம்பெற்ற ‘வசீகரா’ பாடலைப் பாடியதன் மூலம், தமிழகத்தில் பிரபலமடைந்தார். மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’, தமிழக அரசின் ‘கலைமாமணி’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப்பெற்றுள்ள ஜெயஸ்ரீ, சென்னை மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x