Published : 25 Mar 2023 06:02 AM
Last Updated : 25 Mar 2023 06:02 AM
சென்னை: மாநிலத்தின் மின்உற்பத்தி, தேவையை கருத்தில் கொண்டு என்எல்சி விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி), சுரங்கம் அமைக்க எடுக்கப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு, மாற்றுஇடம், ஒப்பந்தப்படி நிரந்தர வேலைதராதது தொடர்பான சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதன் மீது, அருண்மொழித்தேவன் (அதிமுக) , கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச்செல்வன் (விசிக), நாகை மாலி (சிபிஎம்) ஆகியோர் பேசினர்.
அப்போது, முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, என்எல்சிநிறுவனத்துக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அதுவரை, வருவாய்த் துறையினர், காவல் துறையினர் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள், அந்த நிலத்தை வழங்கியபோது அதற்கு மாற்றாக நிரந்தர வேலைவாய்ப்பு, சங்கம் அமைத்து மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு, உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் மீது பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
ஒப்புக் கொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை என்எல்சி நிறுவனத்திடம் வலியுறுத்தினோம். முதல்கட்டமாக 1,500 காலிப்பணியிடங்களில் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சங்கத்தின் மூலம் ஏஎம்சி அடிப்படையில் பணி நியமனம் செய்வதாக கூறியுள்ளனர்.
ரூ.23 லட்சமாக இருந்த இழப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நல்லமுறையில் நடைபெற்று வருகிறது. தற்போது வேலைவாய்ப்பை உறுதி செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே முதல்வர் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறார். அவரது நேரடி கவனம் இருப்பதால், விவசாயிகளுக்கு பெரிய அளவில்பாதிப்பு ஏற்படுவதை தடுத்து, உரிய இழப்பீடு வழங்குதல், வேலைவாய்ப்பு, மறு குடியமர்வு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள், அமைச்சர்களுக்கு உரிய ஆணைகளை பிறப்பித்துள்ளார். என்எல்சி நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியைஅந்நிறுவனம் வேறு மாநிலத்தில் செலவழிக்கவில்லை. ரூ.100 கோடியை இப்பகுதியில் செலவழிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
நிலத்துக்கான தொகைகளை வழங்குவதற்காக குறைதீர்ப்பு மையத்தையும் அரசு உருவாக்க உள்ளது. இங்கு சொல்லப்பட்டுள்ள கோரிக்கைகள் அரசின்கவனத்தில் உள்ளன. விவசாயிகள் பாதிப்பின்றி நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். சேத்தியாதோப்பில் 61 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, தனியாருக்கு வழங்கப்பட உள்ளதாக ஜி.கே.மணி கூறினார்.
இந்த தகவலுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. இதுபோன்ற நிலை இல்லை. அரசு நிலம் கையகப்படுத்துவதாக இல்லை. விவசாயிகள் நலனில் அக்கறையுடன் உள்ளோம். அதே நேரம், நெய்வேலி நிலக்கரி நிறுவன மின்சாரம் தமிழக மின்தேவையை நிறைவு செய்ய தேவையாக உள்ளது. நம் மின் உற்பத்தி, மின்தேவையை கருத்தில் கொண்டு கட்சிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT