Published : 08 Sep 2017 07:55 AM
Last Updated : 08 Sep 2017 07:55 AM

தனித்தனி போராட்டங்கள் பலனளிக்காது; ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஓரணியில் திரள்வோம்: இயக்குநர் தங்கர் பச்சான் அழைப்பு

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு சாதித்துக் காட்ட வேண்டும் என திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்துக்கு பாஜக கொஞ்சம், கொஞ்சமாக இழைத்து வந்த துரோகத்துக்கும், அநீதிக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. இதுவரை தங்களுக்கு எதிராக எது நடந்தாலும் அனைத்தையும் சகித்துக்கொண்ட மக்களும், நமக்கு இதில் என்ன பலன் கிடைக்கும் என்று நடந்துகொண்ட அரசியல் கட்சிகளும் இனியாவது மாற வேண்டும்.

தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வை முடக்கும் அடுத்த திட்டங்களில் ஒன்றுதான் நீட் தேர்வு. இந்த சதியை மாணவர்கள் புரிந்துகொண்டு விட்டார்கள். இப்போது அவர்களுக்கு பக்கபலமாக இருந்து இனி எக்காலத்திலும் தமிழகத்துக்குள் அனுமதிக்காத முறையில் சட்டத்தை உருவாக்கி மாநில அரசின் உரிமையை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராட்டம் நடத்தி, வேலை நிறுத்தம் செய்து தமிழக மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் பகையை மறந்துவிட்டு ஓரணியில் திரண்டு சாதித்துக் காட்ட வேண்டும்.

மாணவர்களும், இளைஞர்களும் காலம் தாழ்த்தாமல் இந்தக் கோரிக்கையை அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் உடனே விடுக்க வேண்டும். இதைத் தவிர்த்து ஒவ்வொருவரும் தனித்தனியாக போராட்டம் நடத்தினால் எக்காலத்திலும் நம் உரிமையை பெற முடியாது.

எனவே, தமிழக மக்கள் அனைவரும் சாதி, மதம், மொழி, இனம், கட்சி பாகுபாடுகளை கடந்து நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரள கேட்டுக்கொள்வோம். நமது உரிமையை நிலைநாட்டுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x