Published : 25 Sep 2017 09:11 AM
Last Updated : 25 Sep 2017 09:11 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓர் ஆச்சரியம்: ஐவகை நில பூங்காவுடன் செயல்படும் திருவிதாங்கோடு நடுநிலைப் பள்ளி

தமிழகத்தின் தொன்மையான ஐவகை நில அமைப்புகளுடன் கூடிய பூங்கா; செயற்கை நீரூற்று: இயற்கை சூழலில் படிப்பதற்கான திறந்தவெளி வகுப்புகள்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் என அசத்துகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு அரசு நடுநிலைப் பள்ளி.

நில அமைப்புகளை உணர்த்தும் பூங்கா

பள்ளி வளாகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை நில அமைப்புகளையும் விளக்கும் வகையில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. நேரு பூங்கா என பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்காவில், குறிஞ்சி நிலத்தை விளக்குவதற்கு செயற்கையான மலை உருவாக்கி, அதில் நீரூற்றும் அமைத்துள்ளார்கள். மருத நிலம் பற்றி விளக்க வயலும், அந்த வயலில் நெற்பயிரும் உள்ளது. இதேபோல் மற்ற நில வகைகளை உணர்த்தும் காட்சிகளும் அந்த பூங்காவில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ரோஜா பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவை தனித்தனியாக உள்ளன.

இந்த பள்ளி வளாகத்துக்கு செல்லும் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் மூலிகை பூங்கா திகழ்கிறது. சோற்றுக் கற்றாழை, கண்டங்கத்திரி, நாராயண உள்ளி, கீழாநெல்லி, பசு முருங்கை, வல்லாரை, கச்சோலம், நன்னாரி, திப்பிலி, தவசு முருங்கை, நொச்சி, துளசி, கற்பூரவள்ளி, சங்கு புஷ்பம், நாககெந்தி, ஆடாதொடா, வசம்பு, ஆமணக்கு, வெற்றிலை, கருங்குறிஞ்சி, சித்திரத்தை என 150-க்கும் அதிகமான மூலிகைகள் உள்ளன.

அழகிய சூழலில் வகுப்பறை

மாணவர்கள் இயற்கையான சூழலில் படிப்பதற்காக நேரு பூங்கா அருகே திறந்தவெளி வகுப்பறை உள்ளது. மரங்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட குருவி கூடு என இந்த வகுப்பறை அழகான சூழலில் இயங்குகிறது.

ஆலமரம் குட்டையான வடிவில் போன்சாய் தாவரமாக வளர்க்கப்படுகிறது. தேசிய பறவை, தேசிய மிருகம் ஆகியவற்றை விளக்கும் வகையில் கல் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. அழகான வண்ண மீன்களுடன் மீன் தொட்டி இருக்கிறது. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முதுமக்கள்தாழி இந்தப் பள்ளியில் உள்ளது. இதன் மூலம் பழங்கால மக்களின் வாழ்வியல் பற்றிய ஏராளமான தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்க முடிகிறது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓவியங்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு வாசகங்கள், ஓவியங்கள் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே உள்ளன. உதாரணமாக, சோமாலியா நாட்டு மக்கள் பசியால் துடிக்கும் படங்கள் உள்ளன. அதேபோல் ஒரேயொரு சோற்றுப் பருக்கை ஒரு எறும்புக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தும் மற்றொரு படம் உள்ளது. உணவுப்பொருட்களை யாரும் வீணாக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த அரசுப் பள்ளியின் ஆச்சரியமான செயல்பாடுகள் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களிடத்திலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஆச்சரியப் பள்ளியின் வளர்ச்சி பற்றி தலைமை ஆசிரியர் அ.ஜஸ்டின்ராஜ் கூறியதாவது:

மாணவர்கள் மிகவும் விருப்பத்தோடு மகிழ்ச்சியான மன நிலையில் படிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இங்கு பல வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம். பெற்றோர்களும், ஏராளமான நன்கொடையாளர்களும் இந்த வசதிகளை உருவாக்க பல உதவிகளை செய்திருக்கிறார்கள். அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் அதே நேரத்தில், மாணவர்களின் கற்றல் திறன்களை வளர்க்கவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே அனைத்து ஆசிரியர்களும் கூடி விவாதிப்போம். கால வரிசைப்படி அந்த ஓராண்டுக்கான செயல்பாடுகள் பட்டியலை தயாரிப்போம். அந்த பட்டியலில் உள்ள வரிசைப்படி திட்டங்களை அமல்படுத்துகிறோம்.

துணைக் கருவிகளைத் தயாரிக்கும் ஆசிரியர்கள்

தினமும் காலையில் இறைவழிபாட்டுக் கூட்டத்துக்கு முன்னர் குறைந்தபட்சம் அரை மணி நேரம் மாணவர்கள் செய்தித்தாள் வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் வகுப்புகள் தொடங்கியவுடனேயே தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் பிழையின்றி சரளமாக எழுதவும், வாசிக்கவும் பயிற்சி அளிக்கிறோம். அனைத்து ஆசிரியர்களும் அனைத்து வகுப்புகளிலும் துணைக் கருவிகள் உதவியோடு பாடம் நடத்துவதை கட்டாயமாக்கியுள்ளோம். ஆகவே, ஒவ்வொரு பாடம் நடத்துவதற்கு முன்பாகவும் அந்த பாடத்தை எவ்வாறு மாணவர்களுக்கு எளிதாக புரிய வைப்பது என்பதற்காக ஆசிரியர்கள் நிறைய பணியாற்ற வேண்டியுள்ளது. ஆசிரியர்களே ஏராளமான துணைக் கருவிகளை தயாரிக்கின்றனர்.

பாடங்களை காட்சி வடிவில் கற்பிக்க வசதியாக நவீன தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் வகுப்பறை உள்ளது. மாணவர்களிடம் பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஓவியம் என பன்முக படைப்பாற்றல் திறன்களை வளர்க்க வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். மாதத்துக்கு ஒருமுறை பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய நபர்களை அழைத்து வந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்ற ஏற்பாடுகள் செய்கிறோம்.

பள்ளி வளாகத்தில் உள்ள பொது நூலகத்தில் சுமார் 1,500 நூல்கள் உள்ளன. இது தவிர ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள வகுப்பறை நூலகங்களில் 50 முதல் 100 நூல்கள் வரை உள்ளன. இதனால் எங்கள் மாணவர்களிடம் வாசிப்பு என்பதை வழக்கமான தினசரி பணியாக பழக்கப்படுத்தியுள்ளோம். சிறுசிறு பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்களால் ஆன பூக்கள் போன்றவை செய்ய பயிற்சி தருகிறோம். மாணவிகளுக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஊதியம் வழங்கும் ஆசிரியர்கள்

எங்கள் பள்ளியில் 6 நிரந்தர ஆசிரியர்கள் பணியாற்றுகிறோம். தமிழாசிரியர் தவிர வேறு பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் இல்லை. கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை சிறப்பாக கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தனியாக இரண்டு பட்டதாரி ஆசிரியர்களை நியமித்துள்ளோம். கணினி பயிற்சி அளிப்பதற்காக ஒரு ஆசிரியர் உள்ளார். மாணவர்களிடம் ஆங்கில மொழித் திறன்களை வளர்ப்பதற்காக வேறொரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நான்கு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை நிரந்தர ஆசிரியர்கள் 6 பேரும் சொந்தப் பணத்தில் இருந்து பகிர்ந்து வழங்கி வருகிறோம். பள்ளி மேம்பாட்டில் ஆசிரியர்கள் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு இருப்பதாலேயே இத்தகைய முயற்சிகள் இங்கு சாத்தியம் ஆகியுள்ளன.

இவ்வாறு தலைமை ஆசிரியர் பெருமிதத்தோடு கூறுகிறார்.

இந்த பள்ளியில் மொத்தம் 149 மாணவர்கள் படிக்கின்றனர். 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி முறையிலான வகுப்புகளும் உள்ளன. மேலும், பெற்றோர்களின் சொந்த ஏற்பாட்டில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளும் தனியாக செயல்படுகின்றன.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், நன்கொடையாளர்கள், கல்வித் துறை அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்றினால் எல்லா ஊர்களிலும் இதேபோன்ற ஆச்சரியப் பள்ளிகளை உருவாக்க முடியும் என்பதற்கு திருவிதாங்கோடு அரசு நடுநிலைப் பள்ளி நம் கண் முன்னே சாட்சியாக திகழ்கிறது.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 89034 56913

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x