கோயில் நிலங்களை ஆக்கிரமித்த குற்றச்சாட்டு: அறநிலையத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கோயில் நிலங்களை அறநிலையத் துறையே ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதியில் கல்லூரிகள் தொடங்க தடை விதிக்க வேண்டும். மேலும், கோயில் நிதியை தவறாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில், "கோயில் நிதி பயன்பாடு குறித்து துறை சாராத தணிக்கையாளர்களைக் கொண்டு தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், கோயில் நிதி, துறை சார்ந்த செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பொது நிதி வழக்கு செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது சட்டப்படி தவறானது.

பொது நிதியில் இருந்து செய்த செலவுகள் குறித்த விவரங்களை கேட்டு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. பொது நிதியில் மேற்கொண்ட செலவு விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. இதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவதில்லை.

அதுபோல், திருவானைக் காவல், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் நிலங்களில் அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. அதற்கு எந்த வாடகையும் வழங்கப்படுவதில்லை. மேலும், கோயில் நிலங்களை அறநிலையத்துறையே ஆக்கிரமித்துள்ளது" என்று குற்றம்சாட்டினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவுக்கு, அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in