Published : 24 Mar 2023 03:58 PM
Last Updated : 24 Mar 2023 03:58 PM

தகுதி நீக்கம் எதிரொலி - 'அஞ்சாதே' தலைப்புடன் ராகுல் காந்தியின் முகப்புப் படம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படம்

சென்னை: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'அஞ்சாதே' என்ற தலைப்புடன் அவரது புகைப்படம் முகப்புப் படமாக மாற்றப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படம் (DP image) மாற்றப்பட்டுள்ளது. பல மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வப் பக்கங்களிலும் இந்த முகப்புப் படம் வைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'அஞ்சாதே' என்ற தலைப்புடன், ராகுல் காந்தியின் புகைப்படம் முகப்புப் படமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர் உங்களுக்காகவும், இந்த நாட்டிற்காகவும் வீதி முதல் நாடாளுமன்றம் வரை தொடர்ந்து போராடி வருகிறார்.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற, தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். எவ்வளவு சதி செய்தாலும், அவர் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை எந்த நிலையிலும் தொடருவார். இந்த விஷயத்தில் நியாயமான நடவடிக்கையை எடுப்பார். போராட்டம் தொடர்கிறது" என்று பதிவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x