

புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித் துறையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் தங்களுக்கு பணி வழங்கக் கோரி மூலகுளம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தண்ணீர் டேங்க் மீது ஏறி பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், ‘அரசை மிரட்டும் வகையில் செயல்பட்டால் மன்னிக்க மாட்டோம்’ என்று பேரவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த என்ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது பொதுப் பணித்துறையில் 2000-க்கும் மேற்பட்டோர் பணியில் அமர்த்தப்பட்டனர். 3 மாதம் பணி செய்த அவர்களை தேர்தல் துறையானது பணியிலிருந்து நீக்கியது. அன்று முதல் ஊழியர்கள் பொதுப் பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு ஒன்றை உருவாக்கி கடந்த 7 வருடங்களாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரி உண்ணாவிரதம், கடலில் இறங்கி போராட்டம், தீக்குளிக்க முயற்சி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த 750 ஊழியர்களை முதல்வர் ரங்கசாமி பணி நிரந்தரம் செய்தார். இதையடுத்து, கடந்த 7 வருடங்களாக பணி வழங்க கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த பொதுப் பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஏராளமானோர் தங்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரி நாள்தோறும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று மூலகுளம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தண்ணீர் டேங்க் மீது ஏறி நின்று பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரி முதல்வரை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனிடையே, அசம்பவிதங்களை தடுக்கும் வகையில் போராட்டம் நடைபெறும் இடத்தில் தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், முன்னாள் பொதுப்பணித் துறை ஊழியர்கள் போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் கேள்வி எழுப்பினார். பேரவைத் தலைவர் செல்வம், "அரசை மிரட்ட முடியாது. அவ்வாறு செயல்பட்டால் மன்னிக்கமாட்டோம். உரிய நடவடிக்கையை போலீஸார் எடுப்பார்கள்" என கூறியுள்ளார்.