Published : 24 Mar 2023 06:46 AM
Last Updated : 24 Mar 2023 06:46 AM
கடலூர்: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் மீது எழுந்த புகார்களை அடுத்து அங்கு தங்கவைக்கப்பட்டு இருந்த 167 பேரை அதிகாரிகள் மீட்டனர்.
அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் உடல்நலம் தேறியவர்கள் கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அரசு அங்கீகாரத்துடன் இயங்கி வரும் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
அந்த வகையில், கடலூர் புதுப்பாளையத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இயங்கி வரும் மனநல காப்பகம், அதன் கிளையான தேவனாம்பட்டினம் மற்றும் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டையில் இயங்கி வரும் மனநல காப்பகம் ஆகிய இடங்களில் 23 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
இதில் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு உணவு வழங்கப்பட்டது.
அதன் பிறகு அனைவரும் உறங்க சென்றனர். காப்பகத்தின் காவலாளிகளும் தனி அறையில் சென்று தூங்கினர். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, காப்பகத்தின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து இங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 5 பேரை மாயமானது தெரியவந்தது.
அவர்கள் கதவை உடைத்து, போர்வைகளை ஒன்றோடு ஒன்றாக கட்டி, முதல் தளத்தில் இருந்து கீழே இறங்கி தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
தேவனாம்பட்டினம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். தப்பி ஓடிய 5 பேரின் குடும்பத்தினருக்கும் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT