தீர்ப்பை கேட்டதும் கண் கலங்கிய பழனிச்சாமியின் மனைவி

தீர்ப்பை கேட்டதும் கண் கலங்கிய பழனிச்சாமியின் மனைவி
Updated on
1 min read

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் தனக்கும், தனது கணவருக்கும் தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பை கேட்டதும் நீதிமன்ற வளாகத்தில் கண் கலங்கினார் பள்ளி நிறுவனர் பழனிச்சாமியின் மனைவியும், பள்ளித் தாளாளருமான சரஸ்வதி.

முதலில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் விடுவிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி முகம்மது அலி, 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, தண்டனை விவரம் பின்னர் வழங்கப்படுமென கூறி, தீர்ப்பை ஒத்திவைத்தார்.

ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் நீதிமன்ற அறையிலேயே 10 பேரும் அமர்ந்திருந்தனர். பின்னர் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அப்போது குற்றவாளிகள் அனைவரும் எழுந்து நின்றனர். தீர்ப்பை வாசித்த பின்னர் நீதிபதி தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

தனது கணவருக்கு ஆயுள் தண்டனையும், தனக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டதை அறிந்ததும் சரஸ்வதி கண் கலங்கினார். பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரின் முகங்களும் சோகமாகவே காட்சியளித்தன. தனக்கு வேண்டியவர்கள் மற்றும் உறவினர்களிடம் மிகுந்த சோகத்துடனேயே பழனிச்சாமி பேசினார்.

நீதிமன்றத்திலிருந்து நேராக சிறைக்கு செல்வதால், தனது கைப்பையில் இருந்த வீட்டுச் சாவி உள்ளிட்டவைகளை தனது உறவினரிடம் சரஸ்வதி ஒப்படைத்தார். பிற்பகல் 2.30 மணிக்கு அனைத்தும் முடிந்துவிட்டாலும், சிறையில் அடைப்பதற்கான உத்தரவு உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைகளை முடித்துவிட்டு, மாலை 6 மணிக்கு 9 பேரும் (கட்டிடப் பொறியாளர் ஜெயச்சந்திரன் தவிர) வேன்களில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மருத்துவப் பரிசோதனைகளை முடித்த பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தீர்ப்பு வெளியான உடனேயே எதிரிகளை சிறைக்கு அழைத்துச் செல்ல வேன்களை போலீஸார் நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்து தயார் நிலையில் வைத்திருந்தனர். இவர்களை காண ஏராளமான பொதுமக்களும் நீண்டநேரம் காத்திருந்தனர். பிற்பகல் 4 மணி வரையில் விரக்தியோடு நீதிமன்ற வளாகத்திலேயே காத்திருந்த குழந்தைகளை இழந்த பெற்றோர், பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

பொறியாளருக்கு ஜாமீன்

தண்டனை விதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவரான கட்டிடப் பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப் பட்டது. இவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென அதே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு மாலையில் ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பு குறித்து பள்ளி நிர்வாகத் தரப்பினரிடம் கேட்டபோது, எந்த கருத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in