

தமிழக டிஜிபி ராமானுஜத்தை அப்பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று கோரி திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு (இன்று) உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஓய்வு பெற்ற பிறகும் பணி நீட்டிப்பு அடிப்படையில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் யாரையும் தேர்தல் தொடர்பானப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. ஆனால், தமிழக டிஜிபி ராமானுஜம் பணி ஓய்வு பெற்ற நிலையிலும் தொடர்ந்து அதே பணியில் நீடிக்கிறார். எனவே, தேர்தல் நியாயமாக நடக்க உறுதி செய்யும் வகையில் அவரை வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தோம்.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காக அனூப் ஜெய்ஸ்வாலை டிஜிபியாக நியமித்த தேர்தல் ஆணையம், தேர்தல் தொடர் பான பணிகளிலிருந்து டிஜிபி ராமானுஜத்தை விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. எனினும் காவல் துறை நிர்வாகம் சார்ந்த பணிகளைக் கவனிக்கும் தலைமைப் பொறுப்பில் டிஜிபியாக தொடர்ந்து ராமானுஜம் நீடிக்கிறார்.
இதனால் ஒரே நேரத்தில் தமிழகத்தில் 2 டிஜிபிக்கள் பணியில் இருப்பது தேர்தல் நியாயமாக நடப்பதற்கு இடையூறாகவும், பல குழப்பங்களை ஏற்படுத்தக் கூடிய தாகவும் இருக்கும். எனவே, தமிழக காவல்துறை தலைமைப் பொறுப்பான டிஜிபி பதவியில் ராமானுஜம் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்காத வகையில் உயர் நீதிமன்றம் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் இளங்கோவன் கூறியுள்ளார். இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை விசா ரணைக்கு வந்தது.
அப்போது, அனூப் ஜெய்ஸ்வாலை தேர்தல் தொடர்பான பணிகளைக் கவனிப்பதற்கான டிஜிபியாக நியமித்து தேர்தல் ஆணையம் பிறப் பித்த உத்தரவின் நகலைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வியாழக்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தனர்.