செப்.20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

செப்.20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

வரும் செப்டம்பர் 20-ம் தேதி வரை முதல்வர் கே.பழனிசாமி ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரும்பான்மை இழந்த முதல்வர் கே.பழனிசாமி ஆட்சி நீடிக்கக் கூடாது, ஆளுநர் நடவடிக்கை எடுக்காததால் சட்டப்பேரவையைக் கூட்டி தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஸ்டாலின் ரிட் மனு தாக்கல் செய்தார்.

இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.ராமன், இதே போன்ற கோரிக்கையை வலியுறுத்தி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனுதாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனிடம் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா சட்டப்பேரவை செயலரிடம் ஆலோசித்து தெரிவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மதியம் நீதிமன்றம் கூடியதும் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் அரசின் பதிலைச் சமர்ப்பித்தார், அதில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கைத் தொடங்கி விட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இதோடு மரபுப்படி அவைத்தலைவர் எடுக்கும் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற எதிர்மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று தலைமை வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், ''இடையே மைனாரிட்டி அரசு மெஜாரிட்டி அரசாக மாறிவிடும்.  அதாவது 19 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு உடனடியாக சபாநாயகர் நம்பிக்கை வாக்கெட்டுப்பு நடத்த வாய்ப்புள்ளது'' என்றார்.

இதனையடுத்து புதன் கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாது என்று உறுதி அளிக்க முடியுமா என்று நீதிபதி தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனிடம் கேட்டார். இதற்கு நாராயண் எதிர்மறையாகப் பதில் அளிக்க, நீதிபதி துரைசாமி செப்.20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in