Published : 24 Mar 2023 06:01 AM
Last Updated : 24 Mar 2023 06:01 AM

தி.மலை | ஏடிஜிபி எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் விபரீதம்: கோயிலுக்குள் கத்தியுடன் நுழையும் அசாதாரண சூழ்நிலை உருவானது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள அம்மணி அம்மன் கோபுரம் வழியாக வருபவர்களை சோதனையிட வைக்கப்பட்டுள்ள டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் கருவியின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ஏடிஜிபி சங்கர் (கோப்புப்படம்). உள்படம்: அண்ணாமலையார் கோயிலில் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

திருவண்ணாமலை: தமிழக ஏடிஜிபி சங்கரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால், அண்ணாமலையார் கோயில் உள்ளே கத்தியுடன் இளைஞர் நுழையும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்தாண்டு அக்டோபர் மாதம் காரில் கொண்டு செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்தது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பாதுகாப்பை பலப்படுத்தஉளவுத்துறை உத்தரவிட்டது. இருப்பினும், தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்புகுளறுபடி தொடர்ந்தது.

இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்பு பணியை, ஏடிஜிபி சங்கர்ஆய்வு செய்தபோது வெட்ட வெளிச்சமானது.

அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன்கோபுரம் வழியாக, பக்தர்கள் அனுமதிக்கப்படும் வழி தடத்தில் உள்ள ‘டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் கருவியை ஏடிஜிபி சங்கர் ஆய்வு செய்தார். அப்போது, அதன் செயல்பாடு குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் கேட்டதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

பின்னர், பக்தர் ஒருவர் மூலம் சோதித்து பார்த்தார். அவரிடம் இருந்த செல்போன், வாகனத்தின் சாவி உள்ளிட்ட அனைத்தையும் வெளியே வைத்துவிட்டு, டோர் பிரேம் டிடெக்டர் கருவி வழியாக நுழைய அறிவுறுத்தினார். அதன்படி, அவரும் நுழைந்து வந்தார். பின்னர், கையில் இரும்பு பொருளை எடுத்துக்கொண்டு வர செய்தார்.

அப்போது, இரும்பு கொண்டு வருவதற்கான சமிக்கை கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஏடிஜிபி கி.சங்கர், ‘உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கீடு செய்கிறது. பிற பொருட்கள் கொண்டு வருவதையும் சமிக்கை மூலம் அடையாளம் காண, கோயிலில் உள்ள அனைத்து இயந்திரங்களும் செயல்பட வேண்டும். இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஏடிஜிபி சங்கரின் எச்சரிக்கையை ‘இந்து தமிழ் திசை’ கடந்தாண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. தமிழக ஏடிஜிபி உத்தரவிட்டு 100 நாட்கள்கடந்த பிறகும், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

இதன் விளைவு, திருமஞ்சன கோபுரம் வழியாக நேற்று முன் தினம் கத்தியுடன் பெங்களூரு இளைஞர் நுழைந்து ரகளையில் ஈடுபட்டு பதற்றத்தை ஏற்படுத்தினார். ஏடிஜிபியின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், கத்தியுடன் இளைஞர் நுழைந்ததை முன்கூட்டியே தடுத்திருக்கலாம். அண்ணாமலையார் கோயிலில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: இதன் எதிரொலியாக, ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் பே கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு நேற்று போடப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு பணி, மறு உத்தரவு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மற்றும் அவர்களது உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், சுவாமி தரிசனத்துக்கு விஐபிக்களை அழைத்து செல்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், பாதுகாப்பு பணியிலும் கவனம் செலுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விஐபிக்களை அழைத்து செல்வதில் மட்டும் காவல்துறையினர் கவனம் செலுத்தாமல், பாதுகாப்பு பணியிலும் கவனம் செலுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x