Published : 24 Mar 2023 06:12 AM
Last Updated : 24 Mar 2023 06:12 AM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட காவலருக்கு கைக்குழந்தையுடன் வந்த நபர் காவலர் பணியை பாராட்டி சல்யூட் வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் பேருந்து நிலையம் முகப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15-வது பட்டாலியனைச் சேர்ந்த சந்தோஷ் என்ற காவலர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவரை நோக்கி கைக்குழந்தையுடன் வந்த நபர், சந்தோஷின் கையில் ஒரு துண்டு சீட்டை கொடுத்தார். அதை வாங்கிய காவலர் சந்தோஷ் ஏதோ முகவரி கேட்கிறார் என நினைத்து அந்த சீட்டில் உள்ள வாசகத்தை படிக்க தொடங்கிய அடுத்த சில நொடிகளில் காவலர் சந்தோஷ் முகத்தில் சந்தோஷம் கலந்த புன்னகை தொற்றிக்கொண்டது.
அத்துடன் இல்லாமல், அந்த நபர் தோளில் கைக் குழந்தையுடன், காவலர் சந்தோஷூக்கு ஒரு ராயல் சல்யூட் வைத்து, அவரது கடமை தவறா பணியை வெகுவாக பாராட்டி கைக்குலுக்கி விட்டு மீண்டும் திரும்பிச்சென்றார்.
இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் திருப்பத்தூர் மாவட்ட காவலர்கள் பணி சிறக்கட்டும் என்ற வாசத்துடன் இந்த வீடியோ காட்சி வேகமாக பலரால் பகிரப்பட்டன.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ காவலர் சந்தோஷின் பணியை பாராட்டி, அந்த நபர் ஒரு துண்டு சீட்டில் ‘எங்கள் உயிரை காப்பாற்ற உங்கள் உயிரை அரணாய் அமைத்து காப்பதற்கு நன்றி’’. இப்படிக்கு கவிமணி என எழுதி அவரிடம் கொடுத்துள்ளார்.
காவலர்கள் பற்றி எவ்வளவோ வேண்டாத தகவல்கள் பலரால் பகிரப்பட்டு வரும் நிலையில், ஒரு சிலர் எங்களது பணிகளை பாராட்டி இது போன்ற உற்சாகமூட்டும் செயல்களில் ஈடுபடுவது எங்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுகிறது. பொதுமக்களுக்காக தான் காவலர்கள் வெயில், மழை, பனி என எதையும் பார்க்காமல் பணிபுரிந்து வருகிறோம் என்பதை உணர்ந்தால் அதுவே போதும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT