ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் முதல் ராகுல் சிறை தண்டனை வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 23, 2023

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் முதல் ராகுல் சிறை தண்டனை வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 23, 2023
Updated on
3 min read

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்: தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழக அரசு பதில் அளித்தது. சில மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்த நிலையில், கடந்த 8-ம் தேதி மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா வியாழக்கிழமை சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

ஓபிஎஸ் பேச்சுக்கு எதிர்ப்பு: அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா வியாழக்கிழமை சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டபோது, அதன் மீது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளட்ட எம்எல்ஏக்கள் பேசினர். இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்திற்கு பேச அனுமதி அளித்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, "ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்றோ, அதிமுக உறுப்பினர் என்றோ நான் சொல்லவில்லை. முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் அவர் கோரும் போது ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கினோம்" என்று தெரிவித்தார். இருந்தாலும் ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்: தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “'எனது மரணம் கடைசியாக இருக்கட்டும்' என்ற சோகக் குரலும், 'என் குடும்பத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு குடும்பத்துக்கு ஏற்படக் கூடாது' என்ற அழுகுரலும் இனியொரு முறை இந்த மாநிலத்திலும் எழக்கூடாது. எழுமானால், சட்டத்தின் பொருளும் மாநிலத்தின் அதிகாரமும் நீர்த்துப் போனதன் அடையாளமாக ஆகிவிடும். மனச்சாட்சியை உறங்கச் செய்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதை பிரகடனமாகவே இந்த மாமன்றத்தில் தெரிவிக்க நான் விரும்புகிறேன்” என்று உருக்கமாக பேசினார்.

மீனவர்கள் கைது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து புதன்கிழமை 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை வியாழக்கிழமை அதிகாலை கைது செய்திருந்தது.

“சென்னை, கோவை, ஓசூரில் 'டெக் சிட்டி' அமைக்கப்படும்”: சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் 'டெக் சிட்டி' என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை அரசு தொடங்கவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம்: அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்துக்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்தபோது, அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவருடைய பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை: சூரத் நீதிமன்றம் தீர்ப்பு: கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது?" என்று பேசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்று குற்றம்சாட்டி சூரத்தின் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள சூரத் நீதிமன்றம், அவருக்கு ரூ.10,000 பிணையில் ஜாமீன் வழங்கியுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. அதற்குள் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

இந்த நிலையில், தீர்ப்புக்கு பின்னர் அதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது மதம், அகிம்சையே அதனை அடைவதற்கான பாதை" என்று பதிவிட்டுள்ளார்.

மாநில அரசுகள் மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்: நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் சோதனை செய்தல், கண்காணித்தல், சிகிச்சையளித்தல், கோவிட் நடைமுறையை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய 5 அடுக்குத் திட்டங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 1,300-ஐ எட்டியுள்ளது.

புதுச்சேரியிலும் விரைவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: மத்திய அரசு அனுமதி பெற்று ஆன்லைன் விளையாட்டுகளை புதுச்சேரியில் தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார். திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை அரசு ஏற்று பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு உக்ரைன் அழைப்பு: உக்ரைன் - ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in