விழுப்புரம் ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் கோரிய வழக்கு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய போலீஸுக்கு ஐகோர்ட் உத்தரவு

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் | கோப்புப்படம்
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி இல்லம் ஆசிரம நிர்வாகிகள் ஏழு பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட ஏழு பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "18 ஆண்டுகளாக ஆசிரமம் நடத்தி வரும் எங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. தற்போது காவல் துறையினர் வேண்டுமென்றே எங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட 4000 பேரை நாங்கள் மீட்டுள்ளோம். இதுவரை எங்கள் மீது புகார் அளிக்கப்படாத நிலையில், போலீஸாரே தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்" எனறு தெரிவிக்கப்பட்டது.

அப்போது காவல் துறை தரப்பில்,"ஆசிரமத்தில் இருந்த ஒருவர் காணமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்த பின்னரே வழக்குப் பதிவு செயயப்பட்டது. மேலும், பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டும் கூறியுள்ளார். அது தொடர்பான மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரமம் தொடர்பான நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்துகொண்டது தொடர்பான விவரங்கள், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான மருத்துவ அறிக்கை ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in