கிருஷ்ணகிரி கொலை | கைது செய்யப்பட்டவர் அதிமுக கிளைச் செயலாளர்: இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் பதில் 

பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: கிருஷ்ணகிரி அருகே மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மருமகனை வழிமறித்து கொலை செய்த மாமனார் சங்கர் அதிமுக கிளைச் செயலாளர் என்று முதல்வர் பேரவையில் தேரிவித்தார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள புழுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைமீறி ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதில் சரண்யாவின் குடும்பத்தினர், ஜெகன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தருமபுரி - கிருஷ்ணகிரி சாலையில் அணை பிரிவு மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலை பக்கமாக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாமனார் சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் ஜெகனை கீழே தள்ளி விட்டனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ஜெகனை வெட்டினர். இதில் ஜெகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதில், தனது மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் மருமகனை பட்டப்பகலில் வெட்டிக் கொன்ற பெண்ணின் தந்தை சங்கர், கிருஷ்ணகிரியில் உள்ள கூடுதல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 23) தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், "பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை நடந்துள்ளது. இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "சங்கர் காவல் துறையால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அவதானப்பட்டி அதிமுக கிளை செயலாளர் என்பது காவல் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை மேற்காள்ளப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக நீதி காக்கும் மண்ணாக இருக்கும் தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணனம் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து மனித நேய அடிப்படையில் சமூக நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in