

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 74 நிலையங்களில் கூடுதலாக மேம்படுத்தப்பட்ட 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் விரைவில் நிறுவப்படவுள்ளன. இந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் க்யூஆர் குறியீடு,யுபிஐ செயலியைப் பயன்படுத்தி முன்பதி வில்லாத ரயில் டிக்கெட்டை எளிதாகப் பெறலாம்.
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டை பெற, டிக்கெட் கவுன்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் பெறும் வகையில், தெற்கு ரயில்வேயில் யுடிஎஸ் மொபைல் செயலி கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை புறநகர் மின்சார ரயில்களில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து பயணிக்க வசதியாக, யுடிஎஸ் மொபைல் செயலி தொடங்கப்பட்டது. இச்செயலி தற்போது நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்மார்ட் போனில் இதை பதிவிறக்கம் செய்து, முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பதற்காக, இதை பயன்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, முக்கிய ரயில் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் க்யூஆர் குறியீடு, யுபிஐ செயலியைப் பயன்படுத்தி, முன்பதிவில்லாத டிக்கெட் பெறும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் மூலம், முன்பதிவில்லாத டிக்கெட் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு மூலம் ரீசார்ஜ் வசதியுடன் இந்த வசதி பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் யு.பி.ஐ. செயலியை பயன்படுத்தி டிக்கெட் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்படுகிறது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் 74 நிலையங்களில் கூடுதலாக, மேம்படுத்தப்பட்ட 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன. ஏற்கெனவே, பல்வேறு ரயில் நிலையங்களில் 34 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் செயல்படுகின்றன. நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், யுபிஐ செயலி மூலம் எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட் எடுக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் உள்ள திரையில் பயணி எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்று தேர்வு செய்தபிறகு, அதற்கான கட்டணத்தை யுபிஐ செயலி அல்லது க்யூஆர் குறியீடு மூலமாக எளிதாக செலுத்தலாம்” என்றார். தெற்கு ரயில்வே 6 கோட்டங்களில் 254 மேம்படுத்தப்பட்ட தானியங்கி டிக்கெட் பெறும் இயந்திரங்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஏப்ரல் மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.