Published : 14 Sep 2017 09:20 AM
Last Updated : 14 Sep 2017 09:20 AM

ஏழைகளுக்கு சேவை செய்யவே சிறப்பு நேர்காணல் மூலம் மருத்துவ மாணவர் தேர்வு: சிஎம்சி முதல்வர் அன்ன புலிமூட் விளக்கம்

ஏழைகளுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுள்ள மருத்துவ மாணவர்களை தேர்வு செய்யவே எங்களுக்கு அனுமதியளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளோம் என்று சிஎம்சி முதல்வர் அன்ன புலிமூட் தெரிவித்தார்.

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, ‘நீட்’ தேர்வின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளது. ‘நீட்’ தேர்வுடன் தாங்கள் நடத்தும் சிறப்புத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களை மட்டுமே சேர்ப்போம் என்று வலியுறுத்தியுள்ளது.

100 மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓரிடத்தை மட்டும் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்காக ஒதுக்கீடு செய்து அதன்படி, மும்பையைச் சேர்ந்த சித்தாந்த் நாயர் என்ற ஒரே மாணவரை சேர்த்துள்ளது.

இதுகுறித்து, வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி முதல்வர் அன்ன புலிமூட் கூறும்போது, ‘ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே எங்கள் கல்லூரியின் நிறுவனர் (ஐடா ஸ்கடர்) அமெரிக்காவில் இருந்து இங்கு மருத்துவமனையையும் கல்லூரியையும் தொடங்கினார். அவரது எண்ணங்களை இதுவரை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

எங்கள் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்காக கூடுதல் நிதிச் சுமையை கொடுப்பதில்லை. எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டு கட்டணம் ரூ.3,000, முதுநிலை மருத்துவப் படிப்புக்கு ரூ.400, சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கு ரூ.500 மட்டுமே வசூலிக்கிறோம்.

இங்கு, கிறிஸ்துவர்கள் மட்டும்தான் படிக்கிறார்கள் என்பது தவறானது. ஆண்டுதோறும் 15 இதரப் பிரிவினரையும் சேர்க்கிறோம். தென்னிந்தியாவில் அதிக மிஷனரிகள் இருப்பதால் கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவ மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர்.

‘நீட்’ தேர்வின் மூலம் வரும் சிறந்த மாணவர்களில் சேவை மனப்பான்மையுள்ள மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, சிறப்பு நேர்காணல் நடத்த அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியுள்ளோம். மாணவர் சேர்க்கை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் விதிகளை மீறவில்லை என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பலமுறை கூறியுள்ளனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x