காஞ்சி பட்டாசு ஆலை விபத்து முதல் பரந்தூர் போராட்டம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 22, 2023

காஞ்சி பட்டாசு ஆலை விபத்து முதல் பரந்தூர் போராட்டம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 22, 2023
Updated on
3 min read

காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்து: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் உள்ள பட்டாசு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களில் 7 பேரின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 7 பெண்கள் உட்பட 16 பேருக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் பகுதியில் நரேன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் சுமார் 50 பேர் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை வழக்கம்போல், பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தது. அப்போது 25-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தபோது, நண்பகல் 12 மணி அளவில் பணியில் இருந்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியுள்ளது. இதனால், அந்தப் பகுதில் இருந்த ஐந்து கட்டிடங்களில் நான்கு கட்டிடங்கள் சுக்கு நூறாக நொறுங்கி தரைமட்டமாகின. ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே எஞ்சி உள்ளது. இந்த விபத்தில் கட்டிடங்களில் வேலை செய்து கொண்டிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் சம்பவ இடத்தில் நான்கு பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

தீ விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். முன்னதாக, விபத்து நடந்த பகுதிக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், தீ விபத்துக்குள்ளான கட்டிடங்களில் தீயை அணைத்தனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தவறு இருந்தால் நிச்சயமாக உரியவர்கள் மீது இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

“நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும்” - முதல்வர்: ஆண்டுதோறும் மார்ச் 22-ஆம் உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதில், “உயிர்நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும். அதாவது நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்” - ஓபிஎஸ்: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளது என எம்ஜிஆர். விதிகளை வகுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக தற்போது போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிடத் தயார்; வழக்கையும் வாபஸ் பெறத் தயார் என்று வாதிடப்பட்டது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க தொடரும் எதிர்ப்பு: உலக தண்ணீர் தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஐந்தாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுக”: "காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் ஆணவக்கொலைக் குற்றங்களுக்கு எதிராக தனிச்சட்டமியற்ற வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில், ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக பெண்ணின் வீட்டாரால் ஜெகன் எனும் இளைஞர் சாலையில் நடுவில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 1,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு 1,000 கடந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியாவில் ஒரே நாளில் 1,134 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 7,026 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

உயர் கல்வி நிறுவனங்கள் குறித்து மத்திய அரசு அதிர்ச்சி தகவல்: ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை குறித்த கேள்வி, மக்களவையில் எழுந்தது. இதற்கு, உயர் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள் நிகழ்ந்தன என்றும், 21 உயர் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி பிரிவுகள் இல்லை என்றும் மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் தெரிவித்துள்ளார்.

மெகபூபா முஃப்தி திட்டவட்டம்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 மீண்டும் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை: காலநிலை மாற்றம் காரணமாகவும், அதிகரித்து வரும் நுகர்வு கலாசாரத்தினாலும் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் ஆபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கூறும்போது, “மனித குலத்தின் உயிர் நாடியான நீர், மாசினாலும் காலநிலை மாற்றத்தினாலும் தூர்ந்து வருகிறது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in