சென்னை மந்தவெளி மேற்குவட்ட சாலைக்கு பாடகர் டிஎம்எஸ் பெயர்: அரசாணை வெளியீடு

டி.எம்.சவுந்தரராஜன் | கோப்புப் படம்
டி.எம்.சவுந்தரராஜன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழ்த் திரையுலகின பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவர் வாழ்ந்த வீடு அமைந்த சென்னை மந்தவெளி மேற்கு வட்டச் சாலைக்கு ‘டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

‘டிஎம்எஸ்’ என்று அன்போடு அழைக்கப்படும், தமிழ் திரையுலகின் தலைசிறந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் 1923 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி பிறந்தார். தனது 60 ஆண்டுகால இசைப் பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி, மெல்லிசைப் பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார். இவரது முருக பக்திப் பாடல்கள் மிகவும் பிரசித்தம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். பல நாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார். பட்டினத்தார், அருணகிரிநாதர், அகத்தியர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 2002-ல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார். தன் பாடல்கள் மூலம் இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் டிஎம்எஸ் 91-வது வயதில் 2013 ஆம் ஆண்டு மறைந்தார்.

இந்நிலையில், டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை மந்தவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்த மேற்கு வட்டச் சாலைக்கு ‘டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார். வரும் 24 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் இந்தப் பெயரை சூட்டுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in