Published : 28 Sep 2017 08:12 AM
Last Updated : 28 Sep 2017 08:12 AM

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அக். 20-ம் தேதி முதல் நேர்காணல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் நீண்ட நாட்களாகியும் வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெ. ஷோபனா நேற்று வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2-ல் அடங்கிய துணை வணிகவரி அலுவலர், 2-ம் நிலை சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி மற்றும் நிதி தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் மேற்பார்வையாளர், இளநிலை கண்காணிப்பாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 18 வகையான பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 2,169 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் அக்டோபர் 20-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x