Published : 22 Mar 2023 06:25 AM
Last Updated : 22 Mar 2023 06:25 AM

உடுமலை | இலவச வீட்டுமனை பட்டா கோரி குளத்தை ஆக்கிரமித்த கிராம மக்கள்

உடுமலை அருகே லிங்கம்மநாயக்கன்புதூர் குளத்தை ஆக்கிரமித்து வீட்டுமனை கேட்டு திரண்ட கிராம மக்கள். | படம்: எம்.நாகராஜன் |

உடுமலை: உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட லிங்கம்மநாயக்கன்புதூரில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் பலருக்கும் வீட்டுமனை இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே ஊரில் தனியார் ஒருவரால் அவருக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம், குளம் அமைக்கும் நோக்கத்துக்காக ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த நிலத்தை தங்களுக்கு வீட்டுமனைகளாக ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். அதிகாரிகள் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாததால், தாங்களாகவே அந்த இடத்தில் குடியேற போவதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, உடுமலையில் வட்டாட்சியர் கண்ணாமணி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், குளத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வீட்டுமனைகளாக மாற்றித் தர இயலாது. ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வேறு நிலத்தை விலைக்கு வாங்கி, அங்கு பட்டா வழங்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குளத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை நேற்று கிராம மக்கள் சுத்தம் செய்து, தங்களுக்கு உரிய இடத்தை அளந்து அவர்களாகவே ஆக்கிரமிப்பு செய்தனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, "ஒருங்கிணைந்த கோவை மாவட்டமாக இருந்தபோதே தனியாரால் குளம் வெட்டவும், நீர் ஆதாரத்தை சேகரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவும் அந்த இடம் தான கிரயமாக ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க முடியாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். அவர்களாகவே ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வழிகாட்டுதல்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x