

சென்னை: தரமணி விஎச்எஸ் மருத்துவமனையில் போதை அடிமை நீக்க மையம் மற்றும் மனநலப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை தரமணி ராஜீவ்காந்தி சாலையில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது விஎச்எஸ் மருத்துவமனை (வாலன்டரி ஹெல்த் சர்வீஸஸ்). இங்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் இலவசமாகவும், மற்ற சிகிச்சைகள் குறைந்தகட்டணத்திலும் அளிக்கப்படுகின்றன.
நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மருத்துவமனையின் என்.சங்கர் வளாகத்தில் இடம்பெற்றுள்ள ராஜீவ் மையத்தில் போதை அடிமை நீக்க மையம் மற்றும் மனநலத் துறை ஆகிய பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னையில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு 150 கோடி அமெரிக்க டாலர் வர்த்தக மதிப்பைக் கொண்ட சன்மார் குழுமம், ரசாயனம், சிறப்பு வகை ரசாயனம், பொறியியல், உலோகம் மற்றும் கப்பல் என பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறது.
இக்குழுமத்தின் ஓர் அங்கமான, சன்மார் சமூகப் பொறுப்பு அறக்கட்டளை, பொதுமக்களுக்கு பலவிதமான நலத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சன்மார் குழுமத்தின், மறைந்த முன்னாள் தலைவர் என்.சங்கர், நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்த செலவில், மிகவும் தரமான மருத்துவச் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பல ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டார்.
அவருடைய அறப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் வகையில், அவருடைய மகன் விஜய் சங்கர், விஎச்எஸ் மருத்துவமனையில் உள்ள என்.சங்கர் வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய, போதை அடிமை நீக்க மையம் மற்றும் மனநலத் துறை ஆகிய பிரிவுகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், விஎச்எஸ் மருத்துவமனையின் தலைவரும், இந்தியத்தேர்தல் ஆணையத்தின் முன்னாள்தலைமை ஆணையாளருமானஎன்.கோபால்சாமி, விஎச்எஸ் கவுரவ செயலாளர் எஸ்.சுரேஷ், மனநலத் துறையின் தலைமை மருத்துவரும், மனநல மருத்துவ ஆலோசகருமான மருத்துவர் லட்சுமி விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், ``புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மனநலப் பிரிவில் மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியசிகிச்சை அளிக்கும் வகையில், உள்மற்றும் புறநோயாளிகள் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு, மன அழுத்தம், மன ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் உள்ளிட்ட அனைத்து மனநலப் பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில், மன நோயாளிகளின் நிலையை ஆய்வுசெய்து மருத்துவ ரீதியாகத் தீர்வுவழங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், போதைக்கு அடிமையானவர்களுக்கு, மறுவாழ்வு அளிக்கும் வகையில், போதை அடிமைநீக்க மையத்தில் 15 நாட்களுக்கு, மருத்துவம் மற்றும் மன ரீதியான தீர்வுகள் அளிக்கப்படும். குறிப்பாகத் திறன் மேம்பாடு, யோகா போன்றசிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு,போதை அடிமைப் பிடியிலிருந்து முழு அளவில் விடுபட மருத்துவம் அளிக்கப்படும்” என்றனர்.