

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியின் கணவர் அரவிந்தன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அதிகாலை முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அண்மையில் நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி தகவல் கிடைத்ததும், கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.
கணவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, கணவர் அரவிந்தனை சென்னை அழைத்து வந்த கனிமொழி, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று அரவிந்தனின் உடல்நிலை குறித்து கனிமொழியிடமும், மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். சில தினங்களில் மருத்துவமனையில் இருந்து அரவிந்தன் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.