Published : 22 Mar 2023 06:10 AM
Last Updated : 22 Mar 2023 06:10 AM

விருதுநகர் | ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்காத வழக்கு: ஆட்சியர் அலுவலகத்தை ஏலம் விட நோட்டீஸ்

விருதுநகர்: சாலைப் பணி ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்காத வழக்கில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஏலம் விடுவதற்கான நோட்டீஸ் நீதிமன்றம் மூலம் நேற்று ஒட்டப்பட்டது.

மதுரையைச் சேர்ந்தவர் சவரிமுத்து. நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான இவர் 1998-ல் திருமங்கலத்திலிருந்து சாத்தூர் வரை சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார். ரூ.3 கோடியில் சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது. பணிகள் தொடங்கி சுமார் 30 சதவீதம் முடிந்த நிலையில், 1999-ம் ஆண்டு டிசம்பரில் சவரிமுத்து உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, வேறு நபருக்கு சாலை அமைக்கும் பணி ஒப்பந்தம் விடப்பட்டது.

அதையடுத்து, தான் செய்த 30 சதவீத பணிக்கான செலவுத் தொகையை வழங்க வேண்டும் என விருதுநகரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சவரிமுத்து கடந்த 2002-ல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் 29.6.2007-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், ஒப்பந்ததாரர் சவரிமுத்துவுக்கு அரசு ரூ.87,01,200 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து, அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவும் ரத்து செய்யப்பட்டது.

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை ஏலம் விடுவதற்கான
அறிவிப்புநோட்டீஸை ஒட்டிய நீதிமன்ற அமீனா.

பின்னர் ஒப்பந்ததாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் தொகையை உயர்த்தி ரூ.1,22,97,686 ஆக வழங்க உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 26.5.2021-ல் உத்தரவிட்டது.

இத்தொகையை 9 சதவீத வட்டியுடன் ரூ.2.35 கோடி செலுத்த அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்கப்படாததால், விருதுநகர் ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் மற்றும் அதை ஒட்டியுள்ள இடத்தை ஜப்தி செய்ய கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 12.9.2022-ல் உத்தரவிட்டது. அதன்பின், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நீதிமன்ற அமீனா ஜப்தி நோட்டீஸை ஒட்டிச்சென்றார்.

அதன்பிறகும் புகார்தாரருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத காரணத்தால், ஜப்தி செய்யப்பட்ட விருதுநகர் ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் மற்றும் அதை ஒட்டியுள்ள இடத்தை ஏலம் விடுவதற்கான நோட்டீஸை வழங்கி, கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து, நீதிமன்ற அமீனா ஜெயக்குமார், ஆட்சியர் அலுவலக முகப்புப் பகுதியில், ஏலம் விடுவதற்கான அறிவிப்பு நோட்டீஸை நேற்று ஒட்டிச்சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x