

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தமிழ், கிரந்தம், தெலுங்கு, தேவநாகரி மொழிகளில் எழுதப்பட்ட பழமையான 308 ஒலைச்சுவடிக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 25,543 ஏடுகள் உள்ளன.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில்களில் உள்ள அரிய ஓலைச்சுவடிகளை திரட்டி பாதுகாக்க "கோயில்கள் / மடங்களின் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு, நூலாக்கத் திட்ட பணிக் குழு" அமைக்கப்பட்டுள்ளது.
2022 ஜூலை முதல் இப்பணிக் குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள 138 கோயில்களில் கள ஆய்வு செய்து சுருணை ஏடுகள் 1,76,469-ம், இலக்கியச் சுவடிக் கட்டுகள் 40-ம் , தாள் சுவடி 5-ம், இரும்பு மற்றும் செப்புப் பட்டயம் 26-ஐ கண்டறிந்து அடையாளப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த ஓலைச்சுவடிகளை பராமரித்து நூலாக்கம் மற்றும் மின் படியாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த குழுவினர் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் ராமநாத சுவாமி கோயிலில் கள ஆய்வை நடத்தினர். அவர்கள் கோயில் அறைகளில் ஓலைச் சுவடிகளை தேடியபோது, பழைய கோப்புகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூச்சிகளும், பூஞ்சைகளும் படிந்த நிலையில் கட்டுக்கட்டாக ஓலைச்சுவடிகளை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து சுவடித் திட்டப்பணி குழுவின் ஒருங்கிணைப்பாளரும், சுவடியியல் அறிஞருமான பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: பழங்கால ஓலைச்சுவடிகள் தமிழர் மரபு தொடர்பான முக்கிய ஆவணங்கள் ஆகும். இந்த ஓலைச்சுவடிகளை தேடி பாதுகாத்து, அதில் உள்ளவற்றை படித்து முக்கியத் தகவல்களை ஆவணப்படுத்தி நூலாக்கம் செய்வதுதான் எங்களது முக்கியப் பணி.
இந்தப் பணியை மேற்கொள்வதற்காகத் தான் முதல்வர் வழிகாட்டுதலின் கீழ் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆணையர் கே.வி.முரளிதரன் ஆகியோர் கோயில்கள் / மடங்களின் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு, நூலாக்கத் திட்டப் பணிக்குழுவை உருவாக்கி உள்ளனர். இதன் பதிப்பாசிரியராக முனைவர் ஜெ.சசிகுமார் உள்ளார்.
ராமநாத சுவாமி கோயில் சுவடி திரட்டுநர்களான கோ.விசுவநாதன், மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கள ஆய்வில் ஏராளமான ஓலைச்சுவடிகளை கண்டெடுத்தனர். இந்த தகவல் உடனடியாகக் கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாகச் சுவடிகளைச் சுத்தப்படுத்தி, பராமரித்து அட்டவணைப்படுத்துமாறு கூறினார்.
பின்னர், கண்டறியப்பட்ட ஓலைச்சுவடிக் கட்டுகள் சுத்தம் செய்யப்பட்டு, முறையாக கட்டி வைக்கப்பட்டன. மொத்தம் கண்டெடுக்கப்பட்ட 308 ஓலைச்சுவடி கட்டுகளில் 25,543 ஏடுகள் உள்ளன.
இவை தமிழ், கிரந்தம், தெலுங்கு, தேவ நாகரி மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. மேலும் சுவடியில் உள்ள நூல்களின் பெயர்களை, உரிய மொழி சார் வல்லுநர் மூலம் கண்டறியும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.