

சென்னை: தமிழக அரசு தனது வேளாண் பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகளை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உணவளிக்கும் விவசாயிகள் செழித்தால், உலகம் செழிக்கும். ஆனால், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆகவும், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 4000 ஆகவும் ‘உயர்த்துவோம்’ என்று போலி தேர்தல் வாக்குறுதி கொடுத்தது.
ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 3-வது ஆண்டிலும், சற்றும் கவலையில்லாமல், விவசாயி நலன் குறித்து எண்ணாமல், இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெற்று அறிவிப்புகள் கொடுத்து ஏமாற்றி இருக்கிறது. விவசாயிகள் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு திறனற்ற திமுக பதில் அளிக்குமா?" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.