வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி: பாஜக செய்தி தொடர்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி: பாஜக செய்தி தொடர்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்
Updated on
1 min read

மதுரை: வட மாநில தொழிலாளர்கள் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய வழக்கில் பாஜக செய்தி தொடர்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக டெல்லியைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரசாந்த் குமார் உம்ராவ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தூத்துக்குடி போலீஸாரின் பதில் மனுவை கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்பு நிதி தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாதிடுகையில், அமைதியாக உள்ள தமிழகத்தில் திட்டமிட்டு இரு மாநில தொழிலாளர்கள் இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் மனுதாரர் ட்விட்டர் பக்கத்தில் வதந்தி பரப்பியுள்ளார்.

இது இவரின் முதல் ட்வீட் கிடையாது. இதுபோன்று பல சட்ட விரோதமான பொய்யான தகவல்களை ட்விட்டரில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இவரது வீடியோவால் தமிழகத்தில் அசாதாரண சூழல் உருவானது. தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் அமைதியை ஏற்படுத்தியது. வட மாநில அதிகாரிகள் குழு தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்தது.

தமிழக முதல்வர் வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அரசு பாதுகாப்பாக இருப்பதாக நம்பிக்கை ஊட்டினார். வட மாநில தொழிலாளர்களுக்காக உதவி எண் (ஹெல்ப் லைன்) அறிவிக்கப்பட்டது. அதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் அச்சத்துடன் தொடர்பு கொண்டனர். இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு செயல்பட்ட மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

பின்னர் நீதிபதிகள், மனுதாரர் ஒரு வழக்கறிஞர். அவர் ஏன் இதுபோன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபதிவேற்றம் செய்தார். அந்த வீடியோவால் ஏற்படும் பின்விளைவுகளின் தீவிரத் தன்மை அவருக்கு தெரியாதா? மனுதாரர் எங்கு வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அவருக்கு சமூக பொறுப்பு இல்லையா? ஒவ்வொரு நபருக்கும் சமூக பொறுப்பு என்பது இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். பின்னர் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதனிடையே, இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, பிரசாந்த் குமார் உம்ராவுக்கு முன்ஜாமீன் வழங்கியும், அவர் 15 நாட்கள் தூத்துக்குடியில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். இனிமேல் இவ்வாறு வதந்தி பரப்ப மாட்டேன் என உறுதி கடிதம் வழங்க வேண்டும். அதை மீறினால் அவரது முன்ஜாமீன் தானாக ரத்தாகிவிடும் என தீர்ப்பை வழங்கி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in