தமிழக பட்ஜெட் 2023-2024: கோயம்புத்தூர், மதுரையில் ரூ.17,500 மெட்ரோ ரயில் திட்டம்

தமிழக பட்ஜெட் 2023-2024: கோயம்புத்தூர், மதுரையில் ரூ.17,500 மெட்ரோ ரயில் திட்டம்
Updated on
2 min read

கோயம்புத்தூர், மதுரையில் முறையே ரூ.9,000 கோடி, ரூ.8,500 கோடி என ரூ.17,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகள் ரூ.63,246 கோடி செலவில் 119 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் வழித்தடமாக, பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப்பிரிவு வரையிலான உயர் வழித்தடம் வரும் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்துவரும் இரண்டாம் நிலை நகரங்களில் முதன்மையானது கோயம்புத்தூர். ஜவுளி, தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள், உற்பத்தித்துறை என பல் தொழில்களின் இருப்பிடமாகவும், தொழில்முனைவுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தூங்கா நகரமான மதுரை மாநகரம், தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்துக்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும். இந்த இரண்டு நகரங்களில் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈரோடு, நெல்லை, செங்கையில் ஐடி பூங்கா: மின்னணு முறையில் எளிதாக, வெளிப்படையாக அனைத்து சேவைகளையும் மக்களுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், ‘சிம்பிள் கவ் (Simple Gov)’ என்ற புதிய முயற்சியை அரசு தொடங்குகிறது. இம்முயற்சியின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசுத் துறைகளின் நடைமுறைகளையும், சேவைகளையும் கணினிமயமாக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

மென் பொருட்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், உரிய தரநிலைகளுடன் உருவாக்குவதற்காக ரூ.100 கோடி மதிப்பில் மின் ஆளுகை நிதி ஏற்படுத்தப்படும். மேலும், உயர்ந்த இணைய இணைப்பை ஏற்படுத்தவும், குறைந்த விலையில் பல்வேறு மின் சேவைகளை வழங்கவும் ரூ.400 கோடி மதிப்பீட்டில் ‘ஒருங்கிணைந்த மின்னணு கட்டமைப்பு’ அமைக்கப்படும்.

அதேபோல, சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளில் முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும். சென்னை, கோவை, ஓசூரில் ‘தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை’ தமிழக அரசு அமைக்கும். தற்போது தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நியோ-டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் நீட்சியாக ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா ரூ.1 லட்சம் சதுரஅடி கட்டிடப் பரப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். இதன்மூலம் சுமார் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in