

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்தாண்டு ஜூலை 11 அன்றுஅதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்குஇபிஎஸ் மனுதாக்கல் செய்திருந்தார். இதை எதிர்த்தும், கட்சியின்பொதுச் செயலாளர் தேர்தலுக்குதடை கோரியும் மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த னர்.
தேர்தல் முடிவை அறிவிக்க தடை: அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். ஆனால் முடிவுகளை மார்ச் 24வரை அறிவிக்கக் கூடாது என்றும்,இதுதொடர்பான பிரதான வழக்குவிசாரணை மார்ச் 22-ம் தேதி நடைபெறும் என்றும், அதன்பிறகு இந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது இபிஎஸ் தரப்பில், அதிமுகபொதுச் செயலாளர் பதவிக்கானதேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் நேரடியாக மனு தாக்கல் செய்யவில்லை என்றும், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர்ஆகியோர் மறைமுக மனுதாரர்களாக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் பதவிகள்: அதில், ‘‘அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானதாகக் கூறவில்லை. இந்த விஷயத்தை நிலுவையில் உள்ள பிரதான வழக்கில்தான் முடிவு செய்ய முடியும் எனக் கூறியுள்ளது.
இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. எனவே அந்த உத்தரவை மீறும் வகையில் நடத்தப்படவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும்’’ என கோரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நிலுவையில் உள்ளவழக்குகளுடன் ஓபிஎஸ்-ஸின் மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமென நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பாக ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் பி.ராஜலட்சுமி ஆஜராகிமுறையீடு செய்தார். அதையேற்றநீதிபதி, இந்த மனுவையும் நாளைக்கு (மார்ச் 22) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் தெரிவித்துள்ளார்.