

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில், நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் பழனிசாமியின் மனு ஏற்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர்தேர்தல் கடந்த 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 18-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று, பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே இந்த தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 19-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், தேர்தல் நடத்த தடையில்லை. ஆனால் முடிவை அறிவிக்கக் கூடாது எனஉத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை இரு தரப்பினரும் வரவேற்றனர்.
19-ம் தேதி மாலை 3 மணிக்கு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. இதில் பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அவரது ஆதரவாளர்கள் 224 பேர் பழனிசாமி பெயரில் விருப்ப மனுக்களை வழங்கினர்.
தொடர்ந்து, கட்சி தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நேற்று வேட்புமனுவை பரிசீலனை செய்து, பழனிசாமியின் மனுவை ஏற்றுக்கொண்டனர். இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுவைத் திரும்பப் பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கின் தீர்ப்பு வரும் 24-ம் தேதி வழங்கப்பட உள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் முடிவை அறிவிப்பது குறித்து தேர்தல் ஆணையர்கள் முடிவெடுக்க இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.