

தஞ்சாவூர்: பள்ளியில் படித்த மாணவர்களில் பலர் மாற்றுச்சான்றிதழ் வாங்காமல் ஐடிஐ, பாலிடெக்னிக்கில் சேர்ந்ததால் நிகழாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறும் அமைச்சர் அன்பில் மகேஸ், இதுதொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தலின்போது கூறிவிட்டு, தற்போது பட்ஜெட்டில் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தாதது குறித்து மக்களிடமிருந்து கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து, தற்போது இதனை அறிவித்துள்ளனர்.
இதேபோல, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை.
பிளஸ் 2 தேர்வு: பள்ளியில் படித்த மாணவர்களில் பலர் மாற்றுச்சான்றிதழ் வாங்காமல் ஐடிஐ, பாலிடெக்னிக்கில் சேர்ந்ததால் நிகழாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். அப்படியென்றால் இதுதொடர்பாக முறையான ஆவணங்களை அவர் வெளியிட வேண்டும்.
கடந்த 2017-ம் ஆண்டு தர்மயுத்தம் நடத்தியது தவறு எனஓ.பன்னீர்செல்வம் உணர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கூறி வருகிறார். அதுதான் எனது கருத்தும்.
மேற்கு மண்டலத்தை தங்களது கோட்டை என கூறி வரும் பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும், ஆளும் திமுகவுக்கு நிகராக செலவு செய்தும், 20 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு வெறுப்பு இருந்தும், அங்கு திமுகவிடம் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார். பழனிசாமி கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை அதிமுக செல்வாக்கு இழந்து கொண்டே வரும். இவ்வாறு டிடிவி. தினகரன் கூறினார்.