

சென்னை: மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரும் ஜுன் மாதம் திறக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது: அறிவை பரவலாக்கும் வகையில் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்களும், 5 இலக்கிய திருவிழாக்களும் இந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இந்த முயற்சியை வரும் ஆண்டில் ரூ.10 கோடி நிதியில் தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதலாவது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 24 நாடுகளின் பங்கேற்புடன் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.
8 தளங்களுடன்.. மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளை கொண்ட மாபெரும் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. குழந்தைகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித்தேர்வர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இந்நூலகம் அமைந்திருக்கும்.
போட்டித்தேர்வு மாணவர்களுக்கான இணைய வசதியுடன் கூடிய சிறப்புப்பிரிவு, பார்வைத்திறன் குறைந்த வாசகர்களுக்காக பிரெய்லி வகை நூல்கள், குளிர்சாதன வசதியுடன் அரங்குகள், கருணாநிதியின் படைப்புகள், பேச்சுகள் இடம்பெறும் எழிலார்ந்த கூடம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இந்நூலகத்தில் இடம்பெற்றிருக்கும்.
முதல்கட்டமாக இந்நூலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இலக்கியம், பண்பாடு, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இடம்பெறும்.
கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க நிகழ்வாக தமிழ் சமூகத்துக்கு அவர் ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற பெயரை தாங்கி வரும் ஜுன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.