Published : 29 Jul 2014 11:18 AM
Last Updated : 29 Jul 2014 11:18 AM

யுபிஎஸ்சி வினாத்தாள் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

யு.பி.எஸ்.சி வினாத்தாட்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் தயாரிக்கப்படவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுத்தியுள்ளார்.

மேலும், திறனறித் தேர்வு தொடர்பான சிக்கல் வட இந்திய மாணவர்களைவிட தமிழ்நாட்டு மாணவர்களைத் தான் அதிகம் பாதிக்கும் என்பதால், இந்த அநீதிக்கு எதிராக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட 27 வகையான குடிமைப்பணிகளுக்காக (யுபிஎஸ்சி) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல்நிலைத் தேர்வில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தில்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்வதற்கு கூட அனுமதிக்காமல், ஏற்கனவே அறிவித்தவாறு அடுத்த மாதம் 24 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என தேர்வாணையம் பிடிவாதம் பிடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2 தாள்களைக் கொண்டதாகும். 2010ஆம் ஆண்டு வரை முதல்தாள் பொது அறிவை சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும். இரண்டாம் தாள் விருப்பப் பாடம் ஆகும். இதற்காக பட்டியலிடப்பட்டுள்ள 23 பாடங்களில் தங்களுக்குப் பிடித்த ஒன்றை விருப்பப் பாடமாக மாணவர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். இந்த முறையில் மாணவர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்து வந்தது.

ஆனால், 2011 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறையில் விருப்பப்பாடத்திற்குப் பதிலாக திறனறித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திறனறித் தேர்வு தான் குடிமைப் பணிகளுக்கு செல்ல விரும்பும் ஊரக மாணவர்களின் சமவாய்ப்பைப் பறித்து விட்டது.

புதிய முறையில் பொது அறிவுப்பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 100 வினாக்களும், திறனறித் தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு 80 வினாக்களும் கேட்கப்படும். முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சிபெற வேண்டுமானால் பொது அறிவுப்பாடத்தில் 30 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது; அதேநேரத்தில் திறனறித் தேர்வில் 70 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். பொது அறிவுப்பாடத்தைவிட திறனறித் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என்பது இயற்கை நீதிக்கு எதிரானது என்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் திறனறித் தேர்வு சமூக நீதிக்கு முற்றிலும் எதிராக அமைந்திருக்கிறது.

தேர்வுமுறை மாற்றப்பட்டதால் இரு வழிகளில் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. முதலில், குடிமைப்பணிக்கான திறனறித் தேர்வுகள் எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத்தேர்வான ஒருங்கிணைந்த திறனறித் தேர்வை (சிகிஜி - சிஷீனீதீவீஸீமீபீ கிஜீtவீtuபீமீ ஜிமீst) தழுவி உருவாக்கப்பட்டவை ஆகும். இதனால், இத்தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் மாணவர்களின் மேலாண்மைத் திறனை சோதிக்கும் வகையில் உள்ளன. குடிமைப்பணிகளுக்கான அடிப்படைத் தேவை நிர்வாகத் திறன் தான். எனவே, நாட்டை நிர்வகிப்பதற்கான நிர்வாகத் திறனை சோதிக்காமல், அலுவலகங்களை மேலாண்மை செய்யும் மேலாண்மைத் திறனை சோதிக்கும் திறனறித் தேர்வுகள் பொருந்தாத ஒன்றாகும்.

அதுமட்டுமின்றி, இது அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை போன்ற பாடங்களை படித்தோருக்கு சாதகமாகவும், கலை மற்றும் மானுடவியல் மாணவர்களுக்கு பாதகமாகவும் அமைந்திருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக திறனறித் தேர்வின் வடிவம் நகர்ப்புறங்களில் உள்ள படித்த,ஆங்கிலம் பேசும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு ஆதரவாகவும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எதிராகவும் அமைந்திருக்கிறது. புதிய தேர்வு முறை பற்றி ஆய்வு செய்த பல்கலைக் கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் அருண் நிகவேகர் குழு அரசுக்கு அளித்த அறிக்கையிலும் திறனறித் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, பொது அறிவுத் தேர்வில் 200 மதிப்பெண்கள் மற்றும் திறனறித் தேர்வில் 180 மதிப்பெண்களுக்கான வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இந்தியிலும் கேட்கப்படுகின்றன. 20 மதிப்பெண்களுக்கான புரிந்துணரும் திறனுக்கான வினா மட்டும் ஆங்கிலத்தில் கேட்கப்படுகிறது. இந்த வினா தங்களின் தாய்மொழியான இந்தியில் இல்லாததால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை என்பது இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் குற்றச்சாற்று ஆகும். இது நியாயமானதும் கூட. ஒருவரின் புரிந்துணரும் திறனை அவரின் தாய் மொழி மூலமாகத் தான் சோதிக்க வேண்டுமே தவிர, அன்னிய மொழியின் மூலம் சோதிப்பது முறையல்ல.

ஆங்கிலம் என்பது மொழி தானே தவிர... அறிவு அல்ல. குடிமைப்பணிகள் அறிவுசார்ந்தவை என்பதால், மாணவர்களின் அறிவுத்திறனை அறியும் வகையில் தேர்வு அமைய வேண்டுமே தவிர, மொழித்திறனை சோதிக்கும் வகையில் அமையக்கூடாது. அறிவுத்திறன் உள்ளவர்களால் எந்த ஒரு மொழியையும் தேவைக்கேற்ப விரைவாக கற்றுக்கொள்ள முடியும் என்பதையும், மொழித்திறன் மட்டுமே உள்ளவர்களால் அறிவுத்திறனை அவ்வளவு எளிதாக வளர்த்துக்கொள்ள முடியாது என்பதையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் உணர வேண்டும்.

இந்தி பேசாத மாநிலங்களின் மாணவர்களுக்கு மேலும் ஒரு பிரச்சினையும் உள்ளது. முதல்நிலைத் தேர்வில் மொத்தமுள்ள 400 மதிப்பெண்களில் வெறும் 20 மதிப்பெண்களுக்கு இந்தி மொழியில் வினாத்தாள் வழங்கப்படாததைக் கண்டித்தும், அதனால் தங்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாற்றி தான் வடநாட்டு மாணவர்கள் இவ்வளவு தீவிரமாக போராடுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டையும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒரே ஒரு வினா கூட அவர்களின் தாய்மொழியில் கேட்கப்படுவதில்லை. அனைத்து 400 மதிப்பெண்களுக்கான வினாக்களும் அன்னிய மொழியில் தான் கேட்கப்படுகின்றன. இதனால் இந்தி பேசாத மாநிலங்களின் மாணவர்களுக்கு திறமை இருந்தும் மொழிப் பிரச்சினை காரணமாக அவர்களால் தேர்ச்சி பெற முடியாமல் போகிறது.

எனவே, குடிமைப் பணித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

1) குடிமைப்பணி தேர்வுகளுக்கான வினாத்தாட்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் தயாரிக்கப்படவேண்டும்.

2) மாணவர்களின் நிர்வாகத்திறனை சோதிக்காததுடன், நகர்ப்புற மேல்தட்டு மாணவர்களுக்கு சாதகமாகவும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பாதகமாகவும் இருக்கும் குடிமைப்பணி திறனறித் தேர்வை இரத்து செய்து விட்டு, 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு நடைமுறையில் இருந்த விருப்பப்பாட முறையை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்.

3) ஒருவேளை விருப்பப்பாட முறை சாத்தியமில்லை என்றால், இப்போதுள்ள திறனறித் தேர்வை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

4) இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை, அடுத்த மாதம் 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் முதல்நிலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்.

குடிமைப்பணி திறனறித் தேர்வு தொடர்பான சிக்கல் வட இந்திய மாணவர்களைவிட தமிழ்நாட்டு மாணவர்களைத் தான் அதிகம் பாதிக்கும் என்பதால், இந்த அநீதிக்கு எதிராக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x